உலகம்

ஐக்கிய அரபு நாட்டில் பலத்த மழையால் நிரம்பிய அணையில் இருந்து சீறிபாய்ந்து வெளியேறும் வெள்ளம்.

பாலைவனங்கள் நிறைந்த ஐக்கிய அரபு நாட்டிலும் கொட்டி தீர்க்கும் மழை

Published On 2022-08-12 07:33 GMT   |   Update On 2022-08-12 07:33 GMT
  • கனமழை காலங்களில் மழை நீரை சேமித்து வைக்க ஐக்கிய அரபு நாட்டில் ஆங்காங்கே அணைகள் கட்டப்பட்டு உள்ளன.
  • தற்போது பெய்து வரும் மழை காரணமாக ஐக்கிய அரபு நாட்டில் உள்ள பெரும்பாலான அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது.

துபாய்:

வளைகுடா நாடுகளில் எப்போதாவதுதான் பலத்த மழை பெய்யும்.

இங்கு பாலைவனங்கள் அதிகம் என்பதால் கடும் வெயில் வாட்டி வதைக்கும். கோடை காலங்களில் வெயிலின் அளவு உச்சத்தை எட்டும். இதனால் இந்தியா போன்ற நாடுகளில் இருந்து செல்வோர் அந்த மாதங்களில் சொந்த ஊருக்கு திரும்புவது வழக்கம்.

அதே நேரம் மழை காலத்தில் லேசான மழை பெய்யும். சில நேரங்களில் கனமழையும் பெய்து மக்களை மகிழ்விக்கும்.

அந்த வகையில் ஐக்கிய அரபு நாட்டில் கடந்த சில வாரங்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

கனமழை காலங்களில் மழை நீரை சேமித்து வைக்க ஐக்கிய அரபு நாட்டில் ஆங்காங்கே அணைகள் கட்டப்பட்டு உள்ளன. தற்போது பெய்து வரும் மழை காரணமாக ஐக்கிய அரபு நாட்டில் உள்ள பெரும்பாலான அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது.

இந்த நிலையில் இங்கு அடுத்த ஒரு வாரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. அப்போது அணைகளுக்கு மேலும் நீர் வர வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து ஐக்கிய அரபு நாட்டில் உள்ள வுராயா, ஷவ்கா, புராக், சிப்னி, அல்அஜிலி, அஸ்வானி, மம்தூஹ் ஆகிய 7 அணைகள் திறக்கப்பட்டு உள்ளன.

Tags:    

Similar News