உலகம்

வங்காள தேசத்தில் லுங்கி அணிந்ததால் முதியவர் தியேட்டருக்குள் நுழைய அனுமதி மறுப்பு

Published On 2022-08-06 07:55 GMT   |   Update On 2022-08-06 11:09 GMT
  • தியேட்டர் ஊழியர்கள் டிக்கெட் வழங்க மறுத்துவிட்டனர்.
  • முதியவருக்கு சினிமா டிக்கெட் வழங்காததற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.

டாக்கா:

வங்காளதேச நாட்டில் ஸ்டார் சினிபிளக்ஸ் நிறுவனம் நடத்தும் ஒரு சினிமா தியேட்டருக்கு சமன் அலி சர்கார் என்ற முதியவர் படம் பார்க்க சென்றார். அவர் லுங்கி அணிந்து வந்திருப்பதால் தியேட்டர் ஊழியர்கள் டிக்கெட் வழங்க மறுத்துவிட்டனர்.

இதனால் அவர் படம் பார்க்க முடியாமல் வீடு திரும்பினார்.

சமன் அலி சர்க்காருக்கு டிக்கெட் வழங்க மறுக்கப்பட்ட சம்பவத்தை ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இதனால் சர்ச்சை வெடித்தது. முதியவருக்கு சினிமா டிக்கெட் வழங்காததற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.

இதையடுத்து சினி பிளக்ஸ் நிறுவனம் வருத்தம் தெரிவித்தது. இது தொடர்பாக அந்நிறுவனம் கூறும்போது, எங்கள் நிறுவனம் ஒரு நபர் உடையின் அடிப்படையில் வாடிக்கையாளர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டாது என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம். லுங்கி அணிந்திருப்பதால் ஒருவருக்கு டிக்கெட் வாங்குவதற்கான உரிமையை மறுக்கும் கொள்கைகள் எங்கள் நிறுவனத்தில் இல்லை.

சமூக ஊடகங்கள் மூலம் பரப்பரப்பாகும் இந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமாக தவறாக புரிந்து கொண்டதால் ஏற்பட்டதாக இருக்கலாம். இந்த சம்பவத்தை கண்டு நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம் என்று தெரிவித்தது.

இதையடுத்து சமன் அலி சர்கார் மற்றும் அவரது குடும்பத்தினர் அதே தியேட்டரில் படம் பார்க்க அழைக்கப்பட்டனர். லுங்கி அணிந்தபடி சமன் அலி சர்கார் தியேட்டருக்கு சென்று படம் பார்த்தார்.

Similar News