உலகம்

அமெரிக்காவில் புழுதி புயலில் சிக்கி 100 வாகனங்கள் மோதல்- 6 பேர் பலி

Published On 2023-05-02 05:30 GMT   |   Update On 2023-05-02 05:30 GMT
  • விபத்து நடந்த பகுதிக்கு போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் விரைந்து சென்றனர்.
  • விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இல்லினாய்ஸ்:

அமெரிக்காவின் சிகாகோவில் இருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பார்மர்ஸ்வில்லி நகருக்கு இல்லினாய்ஸ் மாகாணத்தில் உள்ள இன்டர்ஸ்டேட் 55 நெடுஞ்சாலையில் ஏராளமான வாகனங்கள் சென்று கொண்டிருந்தன.

அப்போது அங்கு பயங்கரமான புழுதி புயல் வீசியது. எதிரே செல்லும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு தூசிகள் பறந்து நெஞ்சாலையில் பரவியது. இதனால் வாகனங்கள் ஒன்றோடொன்று அடுத்தடுத்து பயங்கரமாக மோதிக் கொண்டன.

சுமார் 3½ கிலோ மீட்டர் தூரத்துக்கு லாரி, கார், பஸ் என 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மோதின. இரண்டு லாரிகளில் தீப்பிடித்தது.

இந்த விபத்துகளில் 6 பேர் பலியானார்கள். 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். விபத்து நடந்த பகுதிக்கு போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் விரைந்து சென்றனர்.

லாரிகளில் பிடித்த தீயை தீயணைப்பு வீரர்கள் மற்ற வாகனங்களுக்கு பரவாமல் அணைத்தனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக இல்லினாய்ஸ் போலீசார் கூறும் போது, '60 பயணிகள் மற்றும் 30 வணிக வாகனங்கள் விபத்துக்குள்ளாகியது' என்றனர். சிகாகோ மற்றும் செயின்ட் லூயிஸ் போன்ற நகரங்களை இணைக்கும் முக்கிய பாதையாக உள்ள இந்த நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்ப்ட்டுள்ளது.

விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News