உலகம்

நேபாள சிறையில் இருந்து விடுதலை ஆகிறார் சீரியல் கில்லர் சார்லஸ் சோப்ராஜ்

Published On 2022-12-21 16:12 GMT   |   Update On 2022-12-21 16:15 GMT
  • சார்லஸ் சோப்ராஜின் உடல்நிலையை கருத்தில் கொண்டு சிறையில் இருந்து விரைவில் விடுதலை செய்யப்பட உள்ளார்.
  • சிறையில் வைத்து தன்னைவிட 44 வயது இளைய பெண்ணான நிஹிதா பிஸ்வாஸை சோப்ராஜ் திருமணம் செய்தார்.

காத்மாண்டு:

கொலை, கொளளை என உலகை உலுக்கிய சீரியல் கில்லர் சார்லஸ் சோப்ராஜ், தனது 52வது வயதில் இந்தியாவில் தண்டனைக் காலம் முடிந்து விடுதலை செய்யப்பட்ட பின்னர், நேபாளத்தில் உள்ள கொலை வழக்குகளுக்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு 2004ம் ஆண்டு நேபாள அரசு வாழ்நாள் சிறை தண்டனை வழங்கியது. சிறையில் இருக்கும்போதே அவருக்கு இருதய பிரச்சினை ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அவருக்கு 78 வயதாகிறது.

இந்நிலையில், வட அமெரிக்க சுற்றுலா பயணிகள் இருவரை கொலை செய்த வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் சார்லஸ் சோப்ராஜை விடுதலை செய்யும்படி நேபாள உச்ச நீதிமன்றம்  இன்று உத்தரவிட்டுள்ளது. அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு சிறையில் இருந்து விரைவில் விடுதலை செய்யப்பட உள்ளார்.

தொடர்ந்து அவரை சிறையில் வைத்திருப்பது கைதிகளுக்கான மனித உரிமைக்கு பொருந்தாத செயல் என்று நீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக ஏஎப்பி செய்தி வெளியட்டுள்ளது. சோப்ராஜை சிறையில் அடைக்க, அவர் மீது வேறு வழக்குகள் எதுவும் நிலுவையில் இல்லை என்றால், இன்றைக்குள் அவரை விடுதலை செய்து, 15 நாட்களுக்குள் நாடு திரும்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1975இல் அமெரிக்க சுற்றுலாப் பயணி கோனி ஜோ ப்ரோன்சிச்சைக் கொலை செய்த வழக்கில் நேபாள நீதிமன்றம் சோப்ராஜுக்கு ஆயுள் தண்டனை வழங்கியது. 10 ஆண்டுக்குப் பிறகு ப்ரோன்சிச்சின் கனடா நண்பரை கொன்ற வழக்கிலும் சோப்ராஜ் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. இந்த வழக்குகளில் தண்டனை பெற்ற சோப்ராஜ்,

2008 ஆம் ஆண்டு சிறையில் வைத்து தன்னைவிட 44 வயது இளைய பெண்ணான நிஹிதா பிஸ்வாஸை திருமணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News