உலகம்

இஸ்லாத்திற்கு எதிரான திருமண வழக்கில் இம்ரான் கான் விடுதலை

Published On 2024-07-13 17:45 IST   |   Update On 2024-07-13 17:45:00 IST
  • விவாகரத்து அல்லது கணவர் இறந்த நான்கு மாதத்திற்கு பிறகுதான் மறுதிருமணம் செய்து கொள்ள முடியும்.
  • இம்ரான் கானின் மனைவியின் முன்னாள் கணவர் திருமணம் செல்லாது என வழக்கு தொடர்ந்திருந்தார்.

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான். இவர் புஷ்ரா பிபியை திருமணம் செய்து கொண்டார். இம்ரான் கானின் 3-வது திருமணம் இதுவாகும்.

ஆனால் இஸ்லாத்திற்கு எதிராக அதாவது விவாகரத்து அல்லது கணவன் இறந்த பிறகு நான்கு மாதங்கள் காத்திருக்காமல் அதற்கு முன்னதாக திருமணம் செய்து கொண்டதாக புஷ்ரா பிபியின் கணவன் வழக்கு தொடர்ந்தார். மேலும் இம்ரான் கான்- புஷ்ரா பிபி திருமணம் செல்லாது என உத்தரவிடக்கோரியும் கேட்டுக்கொண்டார்.

இந்த வழக்கு இஸ்லாமாபாத் மாவட்ட மற்றும் செசன் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது நீதிபதி இம்ரான் கான்- புஷ்ரா பிபி ஜோடிக்கு கடந்த பிப்ரவரி மாதம் தண்டனை வழங்கியது. இந்த தண்டனையை எதிர்த்து கூடுதல் மாவட்ட செசன் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

அஃப்சல் மஜோகா என்ற நீதிபதி தலைமையில் இந்த வழக்கு நடைபெற்றது. இன்று காலை இந்த வழக்கின் தீர்ப்பை மதியம் தெரிவிப்பதாக தெரிவித்தார். அதன்படி இன்று மதியம் தீர்ப்பை வாசித்தார். அப்போது இம்ரான் கான்- புஷ்ரா பிபியை விடுவித்து உத்தரவிட்டார்.

மேலும், மற்ற வழக்குகளில் இவர்கள் தேடப்படவில்லை என்றால் உடனடியாக ஜெயிலில் இருந்து விடுவிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தோஷாகானா ஊழல் வழக்கில் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சிப்ஹெர் வழக்கில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இஸ்லாத்திற்கு எதிரான திருமண வழக்கில் மட்டும் சிறைத்தண்டனை பெற்றிருந்தார். தற்போது இந்த வழக்கிலும் விடுதலை பெற்றுள்ளதால் சிறையில் இருந்து வெளியே வர வாய்ப்புள்ளது.

புஷ்ரா பிபி தனது முன்னாள் கணவர் மனேகாவை விவாகரத்து செய்து 2018-ல் இம்ரான் கானை திருமணம் செய்து கொண்டார். புஷ்ரா பிபி- மனேகாவின் 28 வருட திருமண வாழ்க்கையில் ஐந்து குழந்தைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் புஷ்ரா பிபியின் முன்னாள் கணவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News