உலகம்

இம்ரான்கான் 

பொதுக்கூட்டத்தில் மிரட்டியதாக வழக்கு- பெண் நீதிபதியிடம் மன்னிப்பு கேட்க நீதிமன்றம் வந்தார் இம்ரான்கான்

Published On 2022-09-30 09:31 GMT   |   Update On 2022-09-30 09:31 GMT
  • நீதிபதியை மிரட்டியதாக, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் இம்ரான் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
  • பெண் நீதிபதி விடுமுறையில் உள்ளதால் ஊழியர்களிடம் மன்னிப்பு கேட்க விரும்புவதாக கூறினார்.

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் உதவியாளர் ஷாபாஸ் கில், தேசத்துரோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமாபாத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய இம்ரான்கான், காவல்துறை அதிகாரிகள், தேர்தல் ஆணைய அதிகாரிகள் மற்றும் தனது அரசியல் எதிரிகள் மீது வழக்கு பதிவு செய்யப் போவதாக மிரட்டல் விடுத்தார்.

மேலும் காவல்துறை வேண்டுகோளின்படி, கில்லை இரண்டு நாள் காவலில் எடுக்க அனுமதி வழங்கியதற்காக பெண் நீதிபதி ஜெபா சவுத்ரி மீது நடவடிக்கை எடுக்க உள்ளதால் அவர் தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இம்ரான்கான் தமது பேச்சின்போது குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து அவர் மீது பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் தமது பேச்சிற்காக மன்னிப்பு கேட்க இன்று அவர் கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் தமது வழக்கறிஞருடன் ஆஜரானார். நான் நீதித்துறை மாஜிஸ்திரேட் ஜெபா சவுத்ரியிடம் மன்னிப்பு கேட்க வந்துள்ளேன் என்று தமது டுவிட்டர் பதிவில் இம்ரான் குறிப்பிட்டிருந்தார்.

எனினும் நீதிபதி விடுப்பில் இருப்பதாக நீதிமன்ற ஊழியர்கள் இம்ரான்கானிடம் தெரிவித்தனர். இதையடுத்து இம்ரான் கான் வருகை தந்ததாகவும், அவரது வார்த்தைகள் நீதிபதியின் உணர்வுகளை புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்க விரும்புவதாகவும், இதை நீதிபதி ஜெபா சவுத்ரியிடம் நீங்கள் சொல்ல வேண்டும், என்று கேட்டுக் கொண்ட இம்ரான்கான் நீதிமன்றத்தில் இருந்து வெளியேறினார்.

Tags:    

Similar News