உலகம்

வெற்றியை கொண்டாடும் நேபாள காங்கிரஸ் கட்சியினர்

55 இடங்களில் வெற்றி... ஆட்சியமைக்க பிற கட்சிகளுடன் ஆலோசனை நடத்தும் நேபாள காங்கிரஸ்

Published On 2022-12-01 13:10 GMT   |   Update On 2022-12-01 13:10 GMT
  • ஆளுங்கட்சியான நேபாள காங்கிரஸ் 55 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உள்ளது.
  • சிபிஎன்-யுஎம்எல் கடசி 44 இடங்களை கைப்பற்றி இரண்டாவது இடத்தில் உள்ளது.

காத்மாண்டு:

நேபாளத்தில் 275 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றம், 550 உறுப்பினர்களை கொண்ட 7 மாகாண சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 20ம் தேதி நடைபெற்றது. இதையடுத்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. பாராளுமன்றத்துக்கான 275 உறுப்பினர்களில் 165 பேர் நேரடி வாக்கு மூலமாகவும், மீதமுள்ள 110 பேர் விகிதாச்சார அடிப்படையிலும் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேரடியாக தேர்வு செய்யப்படும் 165 தொகுதிகளில் இதுவரை 162 தொகுதிகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் ஆளுங்கட்சியான நேபாள காங்கிரஸ் 55 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உள்ளது. சிபிஎன்-யுஎம்எல் கடசி 44 இடங்களை கைப்பற்றி இரண்டாவது இடத்தில் உள்ளது.

ஆட்சியமைக்க 138 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனவே, பிற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்கும் முயற்சியில் நேபாள காஙகிரஸ் கட்சி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இதுபற்றி நேபாள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் துணைப் பிரதமருமான பிரகாஷ் மான் சிங் (வயது 66) கூறுகையில், 'ஆட்சி அமைப்பதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். அனைத்து தொகுதிகளின் முடிவுகள் வெளியாகி, விகிதாச்சார வாக்கு முறை அடிப்படையில் ஒதுக்கப்படும் இடங்கள் தீர்மானிக்கப்பட்ட பிறகு, பாராளுமன்ற கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுப்போம்' என்றார்.

நேபாள காங்கிரஸ் கட்சியில் பிரதமர் பதவிக்கான போட்டியில் 6 தலைவர்கள் உள்ளனர். அவர்களில் பிரகாஷ் மான் சிங்கும் ஒருவர். 

Tags:    

Similar News