உலகம்

பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற ஜப்பான் பிரதமர் மீது பைப் குண்டு வீச்சு- அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்

Published On 2023-04-15 03:50 GMT   |   Update On 2023-04-15 09:57 GMT
  • உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்ய கைகாசாகி துறைமுகத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.
  • பிடிபட்ட நபரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

டோக்கியோ:

ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா இன்று வாகயாமா மாகாணத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று இருந்தனர்.

உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்ய கைகாசாகி துறைமுகத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

அவரை பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் சூழந்து இருந்தனர். அப்போது அவர் பேச தொடங்குவதற்கு முன்பு கூட்டத்தில் இருந்து மர்ம நபர் ஒருவர் பிரதமர் புமியோ கிஷிடாவை நோக்கி பைப் வெடிகுண்டை வீசினார்.

அந்த குண்டு, புமியோ கிஷிடா அருகே விழுந்தது. இதில் குண்டு வெடித்து புகை மூட்டம் உண்டானது. இதனால் அங்கு கூடியிருந்த மக்கள் நாலாபுறமும் அலறியடித்தபடி ஓடினார்கள். உடனே பிரதமர் புமியோ கிஷிடாவை பாதுகாப்பு படை வீரர்கள் சூழ்ந்து கொண்டு அங்கிருந்து பாதுகாப்பாக அழைத்து சென்றனர். அதிர்ஷ்டவசமாக அவர் காயமின்றி உயிர் தப்பினார்.

மேலும் குண்டை வீசிய மர்ம நபரை மடக்கி பிடித்தனர். தப்பி ஓட முயன்ற அவரை கீழே தள்ளி பிடித்து அங்கிருந்து கொண்டு சென்றனர். பிரதமர் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் குண்டு வீசப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அப்பகுதி முழுவதையும் பாதுகாப்பு படையினா் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து கண்காணிப்பில் ஈடுபட்டனர். அங்கு யாராவது சந்தேகத்திற்கிடமாக இருக்கிறார்களா? மர்ம பொருள் ஏதாவது இருக்கிறதா? என்று சோதனை நடத்தப்பட்டது. குண்டு வீசிய நபர் யார்? எதற்காக தாக்குதல் நடத்தினார் என்பது குறித்த தகவல்கள் ஏதும் உடனடியாக வெளியாகவில்லை.

அது தொடர்பாக விவரங்களை போலீசார் தெரிவிக்க மறுத்துவிட்டனர். பிடிபட்ட நபரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் ஒரு பிரசார கூட்டத்தில் பங்கேற்று பேசி கொண்டிருந்தபோது அவா் மீது வாலிபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். இதில் ஷின்சோ அபே உயிரிழந்தார்.

இந்த நிலையில் பலத்த பாதுகாப்பை மீறி ஜப்பான் பிரதமர் மீது குண்டு வீசப்பட்ட சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News