கனடாவில் சுவாமி நாராயண் கோவில் சேதம் - இந்தியா கடும் கண்டனம்
- கனடாவின் டொரண்டோவில் பாப்ஸ் சுவாமிநாராயண் கோயில் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
- இந்து கோவில் சேதப்படுத்தப்பட்ட சம்பவத்துக்கு இந்தியத் தூதரகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
டொரன்டோ:
கனடாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான டொரன்டோவில் பாப்ஸ் சுவாமிநாராயண் கோயில் அமைந்துள்ளது.
இந்நிலையில், சுவாமிநாராயண் கோவில் சேதப்படுத்தப்பட்டு, கோயில் சுவரில் 'காலிஸ்தான் ஜிந்தாபாத்' என்று எழுதப்பட்டிருந்தது. டொராண்டோவில் உள்ள சுவாமி நாராயண் கோயிலின் சுவர்களில் இந்தியாவுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. இதற்கு கனடாவில் உள்ள இந்திய உயர் ஆணையரகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஒட்டாவாவில் உள்ள இந்திய உயர் ஆணையரகம், கனடா நிர்வாகத்தை இது குறித்து விசாரணை செய்து குற்றவாளிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, இந்திய உயர் ஆணையரகம் தனது டுவிட்டர் பதிவில், டொராண்டோவில் அமைந்துள்ள சுவாமி நாராயண் கோவிலுக்கு சேதம் விளைவித்து, இந்தியாவுக்கு எதிரான விஷயங்களை எழுதியதை வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக கனடா அதிகாரிகள் விரைவான மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படுகிறார்கள் என பதிவிட்டுள்ளது.