உலகம்

பின்லாந்து தேர்தலில் மத்திய - வலது தேசிய கூட்டணி கட்சி வெற்றி

Published On 2023-04-02 21:47 GMT   |   Update On 2023-04-02 21:47 GMT
  • பிரதமர் சன்னா மரினின் சமூக ஜனநாயக கட்சி நூலிழையில் ஆட்சியை தவறவிட்டது.
  • உக்ரைனுக்கு ஆதரவாக பிரதமர் சன்னா மரின் குரல் கொடுத்தது சர்வதேச கவனத்தை ஈர்த்தது.

ஹெல்சிங்கி:

பின்லாந்தில் நேற்று பாராளுமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். மொத்தம் உள்ள 200 தொகுதிகளில் 22 கட்சிகளைச் சேர்ந்த சுமார் 2,400 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிட்டனர்.

நாட்டின் பொருளாதாரம், அதிகரித்து வரும் கடன், காலநிலை மாற்றம், கல்வி, குடியேற்றம் மற்றும் சமூக நலன்கள் உள்ளிட்ட பிரச்சனைகள் தேர்தல் பிரசாரத்தின்போது அதிகமாக விவாதிக்கப்பட்டன.

பிரதமர் சன்னா மரின் தலைமையிலான சமூக ஜனநாயக கட்சி, பெட்டேரி ஓர்போ தலைமையிலான மத்திய-வலது தேசிய கூட்டணி கட்சி மற்றும் ரிக்கா புர்ரா தலைமையிலான தி ஃபின்ன்ஸ் கட்சி ஆகிய கட்சிகளிடையே கடும் போட்டி நிலவியது.

வாக்குப்பதிவு நிறைவடைந்து வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்றது. நள்ளிரவில் முதல் கட்ட முடிவுகள் வெளியாகின.

இந்நிலையில், பின்லாந்து தேர்தலில் பெட்டேரி ஓர்போ தலைமையிலான மத்திய-வலது தேசிய கூட்டணி கட்சி 20.7 சதவீதத்துடன் முதலிடம் பிடித்தது. சன்னா மரின் தலைமையிலான சமூக ஜனநாயக கட்சி 20.1 சதவீதம் பிடித்து நூலிழையில் வெற்றியை தவறவிட்டது.

Tags:    

Similar News