உலகம்

உகாண்டாவில் பரவும் 'டிங்கா டிங்கா' வைரஸ்- பெண்கள், சிறுமிகளே அதிகளவு பாதிப்பு

Published On 2024-12-21 10:25 IST   |   Update On 2024-12-21 10:25:00 IST
  • இந்த வைரசால் பாதிக்கப்படுபவர்கள் தொடர்ந்து நிற்கும்போது நடனமாடிக் கொண்டே இருப்பது போல் உடல் நடுங்குகிறது.
  • இதுவரை இந்த நோயினால் எந்தவொரு உயிரிழப்பும் ஏற்படவில்லை.

கம்பாலா:

கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் டிங்கா டிங்கா என்று பெயரிடப்பட்ட புதுவகை வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ் பெரும்பாலும் பெண்கள் மற்றும் சிறுமிகளை அதிகளவில் தாக்குகிறது.

அங்குள்ள புண்டிபுக்யோ மாவட்டத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் டிங்கா டிங்கா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த டிங்கா டிங்கா வைரசின் அறிகுறிகளாக அதிகப்படியான உடல் நடுக்கம் மற்றும் காய்ச்சல் ஆகியவை உள்ளன.

இது உடல் இயக்கத்தையும் கடுமையாக பாதிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த வைரசால் பாதிக்கப்படுபவர்கள் தொடர்ந்து நிற்கும்போது நடனமாடிக் கொண்டே இருப்பது போல் உடல் நடுங்குகிறது.

நோயாளிகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டு உடல் பலவீனம் அடையும். சிலர் பக்கவாத உணர்வை கொண்டுள்ளனர். அவர்களால் சிறிது தூரம் நடக்க முடிவதில்லை. இதுவரை இந்த நோயினால் எந்தவொரு உயிரிழப்பும் ஏற்படவில்லை. இதற்காக எதிர்ப்பு சக்தி மருந்துகள் கொடுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த வைரசால் பாதிக்கப்பட்டோர் ஒருவார காலத்துக்குள் குணமடைந்து விடுவதாகவும் புண்டி புக்யோ மாவட்டத்தை தவிர வேறு எங்கும் நோய் பரவவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. டிங்கா டிங்கா வைரஸ் பாதிப்பு எப்படி ஏற்படுகிறது என்பது குறித்து அறிவியல் விஞ்ஞானிகளும், மருத்துவ நிபுணர்களும் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News