உலகம்
இம்ரான்கான்

28ந்தேதி நம்பிக்கையில்லா தீர்மானம்- பாக். பிரதமர் இம்ரான்கானுக்கு சொந்த கட்சியிலேயே எதிர்ப்பு

Published On 2022-03-19 05:53 GMT   |   Update On 2022-03-19 05:53 GMT
இம்ரான்கானின் தவறான கொள்ளைகளால் நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகிறது.
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.

இதனால் பிரதமர் இம்ரான்கானை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகிறது. இம்ரான்கான் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.

அதில் இம்ரான்கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 100 பேர் கடந்த 8-ந்தேதி பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை அளித்தனர்.

இம்ரான்கானின் தவறான கொள்ளைகளால் நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகிறது. இதையடுத்து எதிர்க்கட்சிகள், “ஒன்றிணைந்து பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம்” என்ற பெயரில் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வருகிற 28-ந்தேதி வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

இந்த நிலையில் இம்ரான் கானுக்கு சொந்த கட்சியிலும், கூட்டணி கட்சியிலும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அவரது கட்சியை சேர்ந்த 24 எம்.பி.க்கள், இம்ரான்கான் அரசை கவிழ்ப்பதற்காக எதிர்க்கட்சிகளின் முயற்சியில் கைகோர்த்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் இம்ரான்கான் கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளார்.

இதுகுறித்து ராஜா ரியாஸ் எம்.பி. கூறும்போது, இம்ரான்கான் பண வீக்கத்தை கட்டுப்படுத்த தவறி விட்டார். அரசின் கொள்கைகளில் மகிழ்ச்சியடையாத உறுப்பினர்களில் நாங்கள் ஒரு பகுதியாக இருக்கிறோம் என்றார்.

336 எம்.பி.க்கள் கொண்ட பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தங்களுக்கு 160 எம்.பி.க்கள் ஆதரவு இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதில் இம்ரான்கான் கட்சியின் அதிருப்தி எம்.பி.க்களும் அடங்கும்.

இதனால் 28-ந்தேதி நடக்கும் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் இம்ரான்கான் அரசு தப்புமா? என்பதில் கேள்விக்குறி நிலவுகிறது.

Tags:    

Similar News