செய்திகள்
இம்ரான்கான்

பொம்மை ஆட்சி என்பதா? - நவாஸ் ஷெரீப் மீது இம்ரான்கான் பாய்ச்சல்

Published On 2020-10-18 00:35 GMT   |   Update On 2020-10-18 00:35 GMT
பாகிஸ்தானில் பொம்மை ஆட்சி நடக்கிறது என்ற நவாஸ் ஷெரீப்பின் பேச்சுக்கு பிரதமர் இம்ரான்கான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான்கான் அரசுக்கு எதிராக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி, ஜாமியத் உலமா இ இஸ்லாம் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி உள்ளிட்ட 11 எதிர்க்கட்சிகள் சேர்ந்து பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம் (பிடிஎம்) என்கிற கூட்டணியை கடந்த மாதம் அமைத்தன.

இந்த இயக்கத்தின் மூலம் இம்ரான்கான் ஆட்சிக்கு எதிராக நாடு தழுவிய அளவில் பேரணிகள், பொதுக்கூட்டங்கள், மக்கள் விழிப்புணர்வு கூட்டங்களை நடத்த எதிர்க் கட்சிகள் முடிவு செய்துள்ளன. இறுதியாக அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இஸ்லாமாபாத்தை நோக்கி மிகப்பெரிய பேரணியை நடத்தவும் முடிவு செய்துள்ளன.

இதற்கிடையே, இந்த கூட்டணி சார்பில் பஞ்சாப் மாகாணம் குஜர்ன்வாலா நகரில் நேற்று முன்தினம் மாபெரும் பொதுக்கூட்டம், பேரணி நடந்தது. இந்த கூட்டத்தில் பிடிஎம் அமைப்பின் தலைவர் மவுலானா பஸ்லூர் ரெஹ்மான், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பிலாவல் பூட்டோ ஜர்தாரி, நவாஸ் ஷெரீப் மகள் மரியம் நவாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் காணொலி மூலம் பங்கேற்ற நவாஸ் ஷெரீப் பேசியதாவது:

பாகிஸ்தானில் ராணுவமும், ஐ.எஸ்.ஐ அமைப்பும்தான் ஆட்சி நடத்துகின்றன. ராணுவமும், ஐஎஸ்ஐ அமைப்பும் சேர்ந்து இம்ரான்கானை கொண்டு பொம்மை ஆட்சி நடத்துகின்றன. அரசியலமைப்புச் சட்டத்தை மீறியவர்கள் ஏன் தண்டிக்கப்படவில்லை? ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட என் அரசு ஏன் நீடிக்கவில்லை. 

பாகிஸ்தானில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் மேலாக ஓர் அரசு செயல்படுகிறது. அதுதான் ராணுவம், ஐஎஸ்ஐ இரு அரசுகள் நிர்வாகத்தில் இருந்தால் யார் பொறுப்பேற்பது? என குறிப்பிட்டார். 

இந்நிலையில், நவாஸ் ஷெரீப்பின் பொம்மை ஆட்சி என்ற பேச்சுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News