செய்திகள்
நட்சத்திர ஓட்டல்

சவுதிஅரேபியாவில் வெளிநாட்டினர் பணிபுரிய திடீர் தடை

Published On 2019-07-30 09:48 GMT   |   Update On 2019-07-30 09:48 GMT
சவுதி அரேபியாவில் நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் ரிசார்ட்களில் குறிப்பிட்ட வேலைகளில் வெளிநாட்டினரை பணி அமர்த்துவதற்கு தடை விதிக்க அரசு முடிவு செய்துள்ளது.
ரியாத்:

சவுதி அரேபியாவில் வெளிநாட்டில் பலர் வேலை பார்த்து வருகிறார்கள். குறிப்பாக இந்தியாவில் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் பணியாற்றி வருகிறார்கள். நட்சத்திர ஓட்டல்கள், ரிசார்ட்களில் அதிக அளவில் வெளிநாட்டினர் சமையல் பரிமாறுவது போன்ற வேலைகளை செய்து வருகின்றனர்.மேலும் மானேஜர்களாகவும் பணியாற்றி வருகிறார்கள்.

இந்தநிலையில் சவுதி அரேபியர்களிடம் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. அதை சமாளிக்க சவுதி அரேபிய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனாலும் கடந்த ஆண்டு வேலையில்லா திண்டாட்டம் 13 சதவீதமாக இருந்தது.

இதையடுத்து சவுதி அரேபியாவில் நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் ரிசார்ட்களில் குறிப்பிட்ட வேலைகளில் வெளிநாட்டினரை பணி அமர்த்துவதற்கு தடை விதிக்க அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக சவுதி அரேபியா அரசின் தொழிலாளர் அமைச்சகம் சார்பில் நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் ரிசார்ட்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அதில், நான்கு ஸ்டார் மற்றும் அதற்கு மேல் உள்ள நட்சத்திர ஓட்டல்கள் ரிசார்ட்டுகளில் முதன்மை பணிகளில் சவுதி அரேபியர்களையே நியமிக்க வேண்டும். டிரைவர்கள், கதவை திறப்பவர்கள், சுமை தூக்குபவர் போன்ற பணிகளில் வெளிநாட்டினர் பணி அமர்த்தலாம். இந்த உத்தரவு வருகிற டிசம்பர் 29-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ரெடிமேடு துணிக்கடைகள், வீடு மற்றும் அலுவலக பர்னிச்சர் கடைகள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்பனையகம், கை கடிகார கடைகள் உள்பட 12 பிரிவு வேலைகளில் வெளிநாட்டினரை அமர்த்த சவுதி அரேபிய அரசு தடை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News