செய்திகள்

புல்வாமா தாக்குதல் எதிரொலி: அமெரிக்காவில் பாகிஸ்தானை எதிர்த்து இந்தியர்கள் போராட்டம்

Update: 2019-03-18 02:13 GMT
புல்வாமா தாக்குதலை கண்டிக்கும் வகையில் பாகிஸ்தானுக்கு எதிராக அமெரிக்காவில் இந்தியர்கள் ஆவேச போராட்டத்தில் ஈடுபட்டனர். #PulwamaAttack
வாஷிங்டன், 

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த மாதம் 14-ந்தேதி துணை ராணுவ வீரர்கள் பயணம் செய்த வாகனங்களை குறிவைத்து தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் பலியாகினர்.

பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பு ஏற்றது. அமெரிக்கா, ரஷியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளும் இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தன. 

அத்துடன் ஜெய்ஷ் இ முகமது உள்பட தங்கள் மண்ணில் உள்ள அனைத்து பயங்கரவாத அமைப்புகள் மீது பாகிஸ்தான் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உலக நாடுகள் அழுத்தம் கொடுத்தன.

இதற்கிடையில், அயல்நாடுகளில் வசித்து வரும் இந்திய வம்சாவளியினர் புல்வாமா தாக்குதலை கண்டித்து, பாகிஸ்தானுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள். அந்த வகையில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகரில் நூற்றுக்கணக்கான இந்திய வம்சாவளியினர் பாகிஸ்தானுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்திய சமூகத்தின் சர்வதேச நண்பர்கள் சங்கத்தின் ஹூஸ்டன் நகர கிளை மற்றும் உலகளாவிய காஷ்மீர் பண்டிட் இடம்பெயர்ந்தோர் சங்கத்தின் ஹூஸ்டன் நகர கிளை சார்பில் பிரமாண்ட போராட்டம் நடைபெற்றது.

ஹூஸ்டன் நகர் முழுவதும் நடந்த இந்த போராட்டத்தில் பங்கேற்ற இந்திய வம்சாவளியினர் “உலக பயங்கரவாத நாடு பாகிஸ்தான், பயங்கரவாதத்தை நாட்டின் கொள்கையாக பின்பற்றுவதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும்” என்பவை உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி பேரணியாக சென்றனர்.

“புல்வாமா தாக்குதல் இந்திய இறையாண்மை மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல்” என போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய வம்சாவளியினர் கூறினர். மேலும் அவர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
Tags:    

Similar News