செய்திகள்

பிஜி தீவில் கடும் நில நடுக்கம்- 6.7 ரிக்டரில் பதிவு

Published On 2018-11-19 06:26 GMT   |   Update On 2018-11-19 06:26 GMT
தெற்கு பசிபிக் கடலில் உள்ள பிஜி தீவில் கடும் நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்த நில நடுக்கம் 6.7 புள்ளிகளாக பதிவானது. #Fiji #Earthquake
சுவா:

தெற்கு பசிபிக் கடலில் உள்ளது பிஜி தீவுகள். இது 300 தீவுகளை கொண்டது. இங்கு உள்ளூர் நேரப்படி காலை 9.25 மணிக்கு (இந்திய நேரப்படி நேற்று இரவு 8.25 மணி) கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதனால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் லேசாக குலுங்கின. அங்கு 6.7 ரிக்டரில் நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்க புவியியல் மையம் அறிவித்துள்ளது.

தலைநகர் சுவாவுக்கு கிழக்கே 283 கி.மீட்டர் தொலைவில் பூமிக்கு அடியில் 534 கி.மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவாகியுள்ளது.

மிக அதிக ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பூமி குலுங்கியதை தங்களால் பெருமளவு உணர முடியவில்லை என பொதுமக்கள் தெரிவித்தனர். மேலும் உயிர் சேதம், பொருட் சேதம் எதுவும் ஏற்படவில்லை. சுனாமி எச்சரிக்கையும் விடுக்கவில்லை.



பசிபிக்கடல் பிராந்தியத்தில் உள்ள பிஜி தீவுகள் பூகம்ப அபாய வளையத்தில் உள்ளது. இதனால் இங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகிறது.

இதற்கு முன்பு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கடலுக்கு அடியில் 7.8 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. #Fiji #Earthquake
Tags:    

Similar News