செய்திகள்

மாலத்தீவில் மறு தேர்தல் - முன்னாள் அதிபரின் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

Published On 2018-10-21 11:37 GMT   |   Update On 2018-10-21 11:37 GMT
மாலத்தீவு அதிபர் பதவிக்கான தேர்தலில் முகமது சோலி வெற்றி பெற்றதாக அறிவித்ததை ரத்து செய்ய கோரிய முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. #Maldiveselection #AbdullaYameen #AbdullaYameendefeat
மாலே:

இந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள மாலத்தீவில் கடந்த செப்டம்பர் மாதம் 23-ம் தேதி அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. 
 
மாலத்தீவு முன்னேற்றக் கட்சி சார்பில் போட்டியிட்ட தற்போதைய அதிபர் அப்துல்லா யாமீன், எதிர்க்கட்சியான மாலத் தீவு ஜனநாயக கட்சி வேட்பாளர் இப்ராகிம் முகமது சோலியிடம் தோல்வியடைந்தார். 

58.4 சதவீதம் வாக்குகளை பெற்ற முஹம்மது சோலி வெற்றிபெற்றதாக தேர்தல் கமிஷன் அறிவித்தது. இதனால், மாலத்தீவின் புதிய அதிபராக இப்ராகிம் முகமது சோலி வரும் நவம்பர் 17-ம் தேதி பதவியேற்க உள்ளார். இந்த  பதவியேற்பு விழாவிற்கு வருகை தருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதிய அதிபராக பொறுப்பேற்கவுள்ள முஹம்மது சோலி-யின் தேர்தல் வெற்றிக்கு எதிராக முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீன் கட்சி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கடந்த பத்தாம் தேதி வழக்கு தொடரப்பட்டது.

வாக்குப்பதிவின்போது நிகழ்ந்த வன்முறை சம்பவங்கள் மற்றும் ஓட்டு எண்ணிக்கையில் நடந்த தில்லுமுல்லுவினால் முஹம்மது சோலி  58.4 சதவீதம் வாக்குகளை பெற்றதாக அறிவித்த தேர்தல் கமிஷனின் உத்தரவுக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கை விசாரித்து வந்த சுப்ரீம் கோர்ட்டின் 5  நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பளித்தது. தேர்தலில் தில்லுமுல்லு செய்து முகம்மது சோலி வெற்றி பெற்றதாக வழக்கு தொடர்ந்த அப்துல்லா யாமீன் அதற்கான உரிய சாட்சியங்களை நிரூபிக்காததால் இந்த வழக்கை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.  #Maldiveselection #AbdullaYameen  #AbdullaYameendefeat
Tags:    

Similar News