செய்திகள்

இஸ்தான்புல் தூதரகத்தில் ஜமால் கசோக்கி கொல்லப்பட்டார் - சவுதி அரேபியா ஊடகம்

Published On 2018-10-20 01:08 GMT   |   Update On 2018-10-20 01:08 GMT
இஸ்தான்புல்லில் உள்ள சவுதி அரேபிய துணை தூதரகத்தில் ஜமால் கசோக்கி கொல்லப்பட்டார் என சவுதி அரேபியா செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. #JamalKhashoggi
ரியாத்:

சவுதி மன்னர் சல்மானின் முடியாட்சியை பற்றி கடுமையாக விமர்சித்து வந்தவர், அந்த நாட்டின் பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி (59). சமீபத்தில் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய துணை தூதரகத்துக்கு கடந்த 2-ம் தேதி சென்ற அவர், மாயமானார்.

அவர் அந்த தூதரகத்துக்குள் வைத்து சவுதி அரேபிய ஏஜெண்டுகளால் கொல்லப்பட்டு விட்டார் என்று பல தரப்பிலும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை இதுவரை சவுதி அரேபியா மறுத்து வந்தது.


 
பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி சவுதி அரேபியாவால் கொலை செய்யப்பட்டிருந்தால், அந்த நாட்டின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரித்தார்.

பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி மாயமானது தொடர்பாக மன்னர் சல்மான் விசாரணைக்கு உத்தரவிட்டார். சவுதி அரேபிய அதிகாரிகளின் அனுமதி பெற்று, துருக்கி போலீஸ் அதிகாரிகள் இஸ்தான்புல் துணைத்தூதரகத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், இஸ்தான்புல்லில் உள்ள சவுதி அரேபிய துணை தூதரகத்தில் ஜமால் கசோக்கி கொல்லப்பட்டார் என சவுதி அரேபியா செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி கொல்லப்பட்டதற்கு சவுதி அரேபியா அரசு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளது. #JamalKhashoggi
Tags:    

Similar News