செய்திகள்

சவுதி பத்திரிகையாளர் மாயம் - சவுதி அரேபிய தூதரகத்தில் துருக்கி போலீசார் தீவிர சோதனை

Published On 2018-10-15 19:29 GMT   |   Update On 2018-10-15 19:29 GMT
சவுதி பத்திரிகையாளர் மாயமான விவகாரம் தொடர்பாக இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் துருக்கி போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். #SaudiJournalist #JamalKhashoggi
அங்காரா :

சவுதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி (வயது 59). இவர் சவுதி அரேபிய மன்னராட்சியை கடுமையாக விமர்சித்து வந்தார். ஏமனில் சவுதி அரேபிய கூட்டுப்படைகள் நடத்தி வருகிற வான்தாக்குதல்களையும் கடுமையாக சாடி வந்தார்.

இதற்கிடையே இவர் கடந்த 2-ந் தேதி துருக்கியில் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய துணைத்தூதரகத்துக்கு சென்றபோது, மாயமாகி விட்டார். அவர் அந்த துணைத்தூதரக கட்டிடத்தின் முக்கிய நுழைவு வாயிலுக்குள் நுழைந்ததைப் பலரும் பார்த்துள்ளனர். அதன் பின்னர் அவர் என்ன ஆனார் என்பது உறுதிபடத் தெரியவில்லை.

அதே நேரத்தில் அவர் அந்த தூதரக கட்டிடத்துக்குள் வைத்து, சவுதி அரேபிய ஏஜெண்டுகளால் கொலை செய்யப்பட்டு விட்டதாக நம்பப்படுகிறது. இதற்கு சவுதி அரேபியாதான் காரணம் என்ற குற்றச்சாட்டு வலுத்து வருகிறது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை சவுதி அரேபியா மறுத்து வருகிறது.

அவர் அந்த தூதரக கட்டிடத்தின் பின்புற வாயில் வழியாக உயிருடன் வெளியேறி விட்டதாக சவுதி அரேபியா கூறுகிறது. ஆனால் அவர் அப்படி வெளியேறியதற்கு ரகசிய கண்காணிப்பு கேமரா பதிவுகள் ஏதும் இல்லை என்று துருக்கி சொல்கிறது. இந்த விவகாரத்தில் சவுதி அரேபியா மீது அமெரிக்கா கடும் கோபம் கொண்டுள்ளது.

இந்நிலையில், இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய துணைத்தூதரகத்தில் துருக்கி போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி மாயமானது தொடர்பாக தூதரகத்தில் சோதனை நடத்தி விசாரணை நடத்த திட்ட மிட்டுள்ளதாகவும், அதற்கு சவுதி அரேபிய அரசு அனுமதி அளிக்க வேண்டும் எனவும் துருக்கி தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.



நீண்ட இழுபறிக்கு பின்னர் சவுதி அரேபிய அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து இன்று தூதரகத்துக்கு வந்த சீருடை அணிந்த துருக்கி போலீசார் அங்கு தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். #SaudiJournalist #JamalKhashoggi
Tags:    

Similar News