செய்திகள்

மத்திய அமெரிக்க நாடுகளில் அடைமழை - 12 பேர் பலி

Published On 2018-10-08 10:07 GMT   |   Update On 2018-10-08 10:07 GMT
மத்திய அமெரிக்காவில் கனமழை பெய்து வரும் நிலையில் மழை தொடர்பான விபத்துகளில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். #CentralAmericaRain
ஹோண்டுராஸ்:

மத்திய அமெரிக்காவில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக கவுதமாலாவில் இருந்து கோஸ்டா ரிகா வரையிலான பகுதிகளில் கடந்த வாரம் வியாழக்கிழமை முதல் இடைவிடாமல் பலத்த மழை பெய்து வருகிறது. தினமும் சராசரியாக 50 முதல் 100 மிமீ வரை மழை பெய்கிறது.

இடைவிடாமல் மழை பெய்து வருவதால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சாலைகள், தகவல் தொடர்பு தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. மழை மற்றும் நிலச்சரிவில் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன. மழை பாதிப்பு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழை தொடர்பான விபத்துகளில் 12 பேர் உயிரிழந்ததாக மீட்பு மற்றும் அவசரகால பணிகள் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



மழை மற்றும் நிலச்சரிவினால் ஹோண்டுராஸ் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏராளமான வீடுகள் இடிந்துள்ளன. பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.  நீர்வழிப்பாதைகள் மற்றும் மலைப்பகுதியில் அபாயகரமான இடத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகள் மழை நீரில் அடித்துச் செல்லப்படும் அபாயம் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #CentralAmericaRain
Tags:    

Similar News