செய்திகள்

மீண்டும் பரவும் எபோலா நோய் - உலக நாடுகள் அச்சம்

Published On 2018-05-14 05:08 GMT   |   Update On 2018-05-14 05:08 GMT
எபோலா நோய் மீண்டும் பரவி இருப்பது உலக நாடுகளை கவலையடைய செய்துள்ளது. உலக சுகாதார நிறுவனம் அனைத்து நாடுகளையும் உஷாராக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. #Eboladisease

பிகாரோ:

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் 2013-ம் ஆண்டு ‘எபோலா’ நோய் பரவியது. முதலில் கினியா நாட்டில் பரவிய நோய் பின்னர் சிரியாலோன், லைபிரியா, காங்கோ குடியரசு உள்ளிட்ட நாடுகளிலும் பரவியது.

2016-ம் ஆண்டு வரை இந்த நோய் தொடர்ந்து பரவி வந்தது. இதில் 28 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 11 ஆயிரத்து 310 பேர் உயிரிழந்தனர். இந்த நோய் ‘எபோலா’ என்ற வைரசால் பரவுகிறது.

1976-ல் இதேபோல ஆப்பிரிக்க நாடுகளில் இந்த நோய் பரவி 150 பேர் பலியானார்கள். அதன்பிறகு 2013-ம் ஆண்டுதான் மிக அதிக அளவில் தான் தாக்குதல் இருந்தது. 2016-க்கு பிறகு நோய் கட்டுக்குள் வந்தது.

இந்த நோய் மனிதனிடமிருந்து மனிதனுக்கு உடனடியாக தொற்றக்கூடியதாகும். இதனால் சிகிச்சை அளித்த டாக்டர்கள், நர்சுகள் கூட நோய் தாக்குதலுக்கு ஆளாகி உயிரிழந்தனர்.

‘எபோலா’ நோய் கட்டுக்குள் இருந்த நிலையில் இப்போது காங்கோ குடியரசு நாட்டில் மீண்டும் பரவி இருக்கிறது. இதில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 2 பேர் மட்டுமே ‘எபோலா’ கிருமிக்கு உயிரிழந்ததை உறுதி செய்துள்ளனர். மற்றவர்கள் ‘எபோலா’ நோயினால் தான் உயிரிழந்தார்களா? என்று உறுதிப்படுத்த முடிய வில்லை.

தற்போது 36 பேர் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிசசை பெற்று வருகிறார்கள். அவர்களில் 18 பேர் நிலைமை கவலைக் கிடமாக உள்ளது. மீண்டும் ‘எபோலா’ நோய் பரவி இருப்பது உலக நாடுகளை கவலையடைய செய்துள்ளது.


அனைத்து நாடுகளும் உஷாராக இருக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனமும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. காங்கோ குடிரசில் இருந்து மற்ற நாடுகளுக்கு இந்த நோய் பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நட வடிக்கை எடுத்துள்ளனர்.

‘எபோலா’ நோயை கட்டுப்படுத்த இதுவரை மருந்து கண்டுபிடிக்கப் படவில்லை. நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளை கொடுத்தே நோயை குணப்படுத்தி வருகிறார்கள். #Eboladisease

Tags:    

Similar News