செய்திகள்

அணு ஆயுத விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்த சீன சிறப்பு தூதர் வடகொரியா விரைகிறார்

Published On 2017-11-17 06:56 IST   |   Update On 2017-11-17 06:56:00 IST
அணு ஆயுத விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சீனா சிறப்பு தூதர் ஒருவர் இன்று வடகொரியா செல்கிறார்.
பீஜிங்:

வடகொரியா தொடர்ந்து அணு ஆயுதங்களையும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் சோதித்து வருகிறது. தொடர் பொருளாதார தடைகளையும், உலக எதிர்ப்புகளையும் கண்டுகொள்ளாமல், தனது அணுசக்தி திட்டங்களில் உறுதியாக இருக்கிற வடகொரியாவுக்கு எதிராக ஆசிய நாடுகளை ஒன்று திரட்டும் விதத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சமீபத்தில் பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் சீன அதிபர் ஜின்பிங்கையும் சந்தித்து பேசினார்.

வடகொரியாவின் நட்பு நாடு சீனா என்பதால் இந்த விவகாரத்தில் சீனா ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் என்று சீன அதிபர் ஜின்பிங்கிடம் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வலியுறுத்தினார்.

இந்த நிலையில், அணு ஆயுத விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சீனா சிறப்பு தூதர் ஒருவரை வடகொரியாவுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) அனுப்புகிறது. அவர், சீன கம்யூனிஸ்டு கட்சியின் மத்திய குழுவின் சர்வதேச தொடர்பு துறையின் தலைவர் சாங் டாவ் ஆவார்.



இந்த ஆண்டில் சீனா, தனது உயர் அதிகாரி ஒருவரை சிறப்பு தூதராக வடகொரியா அனுப்புவது இதுவே முதல்முறை என பீஜிங் தகவல்கள் கூறுகின்றன.

இதுபற்றி யோன்செய் பல்கலைக்கழகத்தின் இணைப்பேராசிரியர் ஜான் டேலுரி கருத்து தெரிவிக்கையில், “வடகொரியா அணு ஆயுத திட்ட விவகாரத்தில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டைக்கு ஒரு திருப்புமுனையை அனைவரும் எதிர்பார்க்கின்றனர். மேலும் ஜின்பிங், கிம் ஜாங் அன் உறவை மேம்படுத்த வேண்டும் என்பதிலும் முக்கிய கவனம் செலுத்துவதாக தெரிகிறது” என்று குறிப்பிட்டார். 

Similar News