செய்திகள்

மியான்மர்: ரோஹிங்யா போராளிகள் - ராணுவம் இடையே மோதலில் 30 பேர் பலி

Published On 2016-11-14 09:33 GMT   |   Update On 2016-11-14 09:33 GMT
மியான்மர் நாட்டில் சிறுபான்மையினத்தவராக வாழும் ரோஹிங்யா இனத்தவர்களுக்கும் ராணுவத்துக்கும் இடையே நடந்துவரும் மோதலில் 30 பேர் பலியானதாக தெரியவந்துள்ளது.
யாங்கூன்:

மியான்மர் நாட்டின் வடக்கே உள்ள ரக்கினே பகுதியில் ரோஹிங்யா இன முஸ்லிம்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். மியான்மரில் பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகையை கொண்டவர்களாக இருக்கும் இவர்களில் சிலர் கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த அக்டோபர் மாதம் முதல் பாதுகாப்பு படையினருடன் மிக கடுமையான மோதல்களில் ஈடுபட்டுவரும் இவர்களை ஒடுக்கும் வகையில் ரக்கினே பகுதியை சுற்றிவளைத்து ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

அவ்வகையில் கடந்த இருநாட்களாக ராணுவத்தினருக்கும் ரோஹிங்யா இனப்போராளிகளுக்கும் இடையில் நடைபெற்ற மோதல்களில் 30-க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரோஹிங்யா இனத்தை சேர்ந்த மக்கள்மீது மனித உரிமைகளை மீறியவகையில் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருவதாகவும், இந்த கொடூரத்தை வெளியுலகுக்கு தெரியாமல் மறைப்பதற்காக பத்திரிகையாளர்களை அரசு தடுத்து வருவதாகவும் சமூக வலைத்தளங்களின் மூலம் தகவல் பரவி வருகிறது.

Similar News