உலகம்

பாகிஸ்தானில் அரசு ஊழியர்கள் சம்பளத்தை 10 சதவீதம் குறைக்க பரிசீலனை

Published On 2023-01-27 08:09 IST   |   Update On 2023-01-27 08:09:00 IST
  • பாகிஸ்தான் மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.
  • சர்வதேச நிதியத்திடம் கடன் கேட்டு பாகிஸ்தான் மான்றாடி வருகிறது.

இஸ்லாமாபாத் :

பாகிஸ்தானில் அன்னிய செலாவணி கையிருப்பு குறைந்து வருவதால் அந்த நாடு மிகவும் மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.

இதனால் நிதி பற்றாக்குறையை சமாளிக்க சர்வதேச நிதியத்திடம் கடன் கேட்டு பாகிஸ்தான் மான்றாடி வருகிறது. ஆனால் சர்வதேச நிதியம் விதித்துள்ள நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாததால் கடனை பெறுவதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது.

இந்த நிலையில் சர்வதேச நிதியத்தின் நிபந்தனையை நிறைவேற்றுவதற்கு ஏதுவாக நாட்டில் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்த பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தேசிய சிக்கனக் குழுவை அமைத்தார்.

இந்த குழு அரசு ஊழியர்களின் சம்பளத்தை 10 சதவீதம் குறைப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் அமைச்சகங்களின் செலவினங்களை 15 சதவீதம் குறைப்பது, மத்திய மந்திரிகள், மாகாண மந்திரிகள் மற்றும் ஆலோசகர்களின் எண்ணிக்கையை 78-ல் இருந்து 30 ஆக குறைப்பது போன்ற நடவடிக்கைகளும் பரிசீலனையில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

தேசிய சிக்கனக் குழு விரைவில் தனது பரிந்துரைகளை இறுதி செய்து, பிரதமர் ஷபாஸ் ஷெரீப்பிடம் அறிக்கையை தாக்கல் செய்யும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Similar News