செய்திகள்

ஜூன் 28: ஆன்-ஸ்கிரீன் கைரேகை ஸ்கேனர் கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம்?

Published On 2017-06-23 15:50 IST   |   Update On 2017-06-23 15:50:00 IST
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான விவோ சில நாட்களில் துவங்க இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் ஆன்-ஸ்கிரீன் கைரேகை ஸ்கேனர் வசதி கொண்ட முதல் ஸ்மார்ட்போனினை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பீஜிங்:

ஷாங்காய் நகரில் நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் ஆன்-ஸ்கிரீன் கைரேகை ஸ்கேனர் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போனினை விவோ நிறுவனம் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஸ்மார்ட்போன் வெளியீட்டிற்கு முந்தைய டீசரில் அந்நிறுவனம் புதிய அம்சம் சார்ந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. இந்த டீசரில் கைரேகை ஸ்கேனர் லோகோ திரையினுள் பொருத்தப்பட இருப்பதை வெளிப்படுத்தியுள்ளது. எங்களின் புத்தம் புதிய ஸ்மார்ட்போனினை சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்ய ஆவலோடு காத்திருக்கிறோம் என விவோ இந்தியா ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.   

இந்த தகவல்கள் உண்மையாகும் பட்சத்தில் ஆன்-ஸ்கிரீன் கைரேகை ஸ்கேனர் கொண்ட முதல் ஸ்மார்ட்போனினை வெளியிட்ட பெருமையை விவோ பெறும். ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு முன் புதிய தொழில்நுட்பம் கொண்டு வெளியாக இருக்கும் விவோ ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்கள் இதுவரை மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. 

இதே போன்ற அம்சம் வழங்கப்படும் பட்சத்தில், 2017 ஐபோன் வெளியீடு தாமதமாகலாம் என சமீபத்திய தகவல்கள் தெரிவித்தன. முன்னதாக சாம்சங் நிறுவனம் இவ்வாறான தொழில்நுட்பத்தை தனது ஸ்மார்ட்போனில் தற்சமயம் வழங்காது என கூறப்பட்டது.

Similar News