போலீசாரிடம் குழந்தையை ஒப்படைத்த வாலிபர்.
மதுரை ரெயில் நிலையத்தில் மர்மநபர் விட்டுச் சென்ற 8 மாத ஆண் குழந்தை: சேலம் ரெயில்வே போலீசில் ஒப்படைத்த வாலிபர்
- பெயர், முகவரி தெரியாத ஆண் நபர் ஒருவர் 8 மாத ஆண் குழந்தையை கொடுத்துவிட்டு தண்ணீர் பாட்டில் வாங்கி வருவதாக கூறி சென்றுவிட்டார்.
- குழந்தையின் பெற்றோர் யார்? என கண்டுபிடிக்கும் நடவடிக்கையை பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம்:
நாகர்கோவில்- பெங்களூருக்கு தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண். 17236) மதுரை, கரூர், நாமக்கல், சேலம் வழியாக பெங்களூருக்கு இயக்கப்பட்டு வருகிறது. அதேபோல் மறுமார்க்கமாக பெங்களூருவில் இருந்து சேலம் வழியாக நாகர்கோவிலுக்கு இந்த ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வழக்கம்போல் நேற்று இரவு 7.15 மணி அளவில் நாகர்கோவில் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து இந்த ரெயில் புறப்பட்டு பெங்களூருக்கு சென்று கொண்டிருந்தது. இதில் உள்ள கடைசி பொது பெட்டியில் பயணம் செய்து வந்த வீரமணி (வயது 29) என்பவரிடம் மதுரை ரெயில் நிலைய நடைமேடையில் வண்டி நிற்கும்போது பெயர், முகவரி தெரியாத ஆண் நபர் ஒருவர் 8 மாத ஆண் குழந்தையை கொடுத்துவிட்டு தண்ணீர் பாட்டில் வாங்கி வருவதாக கூறி சென்றுவிட்டார்.
அதற்குள் ரெயில் புறப்பட்டு சென்றது. அடுத்த ரெயில் நிலையமான திண்டுக்கல் வந்தும் குழந்தையை கேட்டு யாரும் வராததால் இது குறித்து வீரமணி உதவி எண்ணுக்கு போன் செய்து தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் ரெயில் இன்று அதிகாலை சுமார் 3.30 மணிக்கு சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்துக்கு வந்ததும் சப்- இன்ஸ்பெக்டர் கோதண்டபானி, பெண் போலீஸ் ரம்யா ஆகியோர் வீரமணி என்பவரிடம் இருந்து குழந்தையை பெற்று போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். பின்னர் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் குழந்தைகள் நல காப்பக களப்பணியாளரிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது. குழந்தையின் பெற்றோர் யார்? என கண்டுபிடிக்கும் நடவடிக்கையை பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.