தமிழ்நாடு செய்திகள்

தண்டையார்பேட்டையில் சோகம்: திருமண விழாவில் நடனமாடிய வாலிபர் மயங்கி விழுந்து மரணம்

Published On 2025-05-29 07:34 IST   |   Update On 2025-05-29 07:34:00 IST
  • டி.ஜே. நிகழ்ச்சியில் சுபாஷ் சந்திரபோஸ் தனது நண்பர்களுடன் சேர்ந்து பாடல்களுக்கு ஏற்ப உற்சாகமாக நடனமாடினார்.
  • பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே சுபாஷ் சந்திரபோஸ் மரணத்துக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

புதுவண்ணாரப்பேட்டை:

சென்னை புதுவண்ணாரப்பேட்டை அசோக் நகர் 4-வது தெருவைச் சேர்ந்தவர் சுபாஷ் சந்திரபோஸ் (வயது 27). விசுவல் கம்யூனிகேஷன் படித்து உள்ளார். இன்னும் திருமணம் ஆகாத இவர், மின்வாரியத்தில் ஒப்பந்ததாரராக உள்ள தனது தந்தை தமிழரசனுக்கு உடந்தையாக வேலை செய்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற தனது நண்பரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நண்பர்கள் சிலருடன் கலந்து கொண்டார். அங்கு நடந்த டி.ஜே. நிகழ்ச்சியில் சுபாஷ் சந்திரபோஸ் தனது நண்பர்களுடன் சேர்ந்து பாடல்களுக்கு ஏற்ப உற்சாகமாக நடனமாடினார்.

அப்போது சுபாஷ் சந்திரபோஸ் திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அவரது நண்பர்கள் மற்றும் மணமக்களின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக சுபாஷ் சந்திரபோசை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், சுபாஷ் சந்திரபோஸ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அதை கேட்டு அவரது நண்பர்கள் கதறி அழுதனர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த புதுவண்ணாரப்பேட்டை போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே சுபாஷ் சந்திரபோஸ் மரணத்துக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் திருமண விழாவில் கலந்து கொண்டவர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News