குன்னூர் மலைப்பாதையில் 300 அடி பள்ளத்தில் விழுந்து பெண் யானை உயிரிழப்பு
- பாறைகளும், கற்களும் சேர்ந்து விழுந்ததால் யானை படுகாயம் அடைந்தது.
- வனவிலங்கு மருத்துவக்குழுவினர் நேரில் சென்று அந்த இடத்திலேயே யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர்.
குன்னூர்:
நீலகிரி மாவட்டம் குன்னூர்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் காட்டு யானைகள் அதிக அளவில் நடமாடி வருகிறது.
இந்தநிலையில் இன்று காலை மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் 6-வது கொண்டை ஊசி வளைவு அருகே பெண் யானை ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த யானை திடீரென பாறை சறுக்கி மலையில் இருந்து 300 அடி பள்ளத்தில் உருண்டு விழுந்தது. அதனுடன் பாறைகளும், கற்களும் சேர்ந்து விழுந்ததால் யானை படுகாயம் அடைந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த குன்னூர் வனச்சரகர் ரவிந்திரநாத் தலைமையிலான வனக்குழுவினர் விரைந்து சென்று சிகிச்சை அளித்தனர். அதற்குள் யானை பரிதாபமாக உயிரிழந்தது.
இதையடுத்து வனவிலங்கு மருத்துவக்குழுவினர் நேரில் சென்று அந்த இடத்திலேயே யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். பலியான யானையுடன் மேலும் சில யானைகள் இருந்துள்ளன. யானை பள்ளத்தில் விழுந்து இறந்ததும் மற்ற யானைகள் தூரத்தில் நின்றபடி வேதனையுடன் பார்த்துள்ளன. இதனால் அந்த யானைகள் தங்களை தாக்கி விடக்கூடாது என்பதற்காக வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.