மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் சாரல் மழை: குற்றால அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
- அருவிகளில் மிதமான தண்ணீர் விழுந்தாலும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து உற்சாகமாக குளித்து மகிழ்ந்து செல்கின்றனர்.
- குற்றால சாரல் திருவிழாவிற்கு அனைவரையும் வரவேற்கும் வகையில் வரவேற்பு பதாகைகள் அமைக்கப்பட்டு வருகிறது.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள குற்றால அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குறைந்த அளவே தண்ணீர் விழுந்து வந்த நிலையில் சாரல் மழையின் எதிரொலியாக அருவிகளுக்கு தண்ணீர் வரத்து சற்று அதிகரித்து காணப்பட்டது.
கடந்த ஒரு வார காலமாக போதிய மழை இல்லாமல் குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து குறைந்த நிலையில் தற்போது பெய்து வரும் சாரல் மழையினால் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அருவிகளில் மிதமான தண்ணீர் விழுந்தாலும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து உற்சாகமாக குளித்து மகிழ்ந்து செல்கின்றனர். மேலும் வருகிற 20-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தென்காசி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடத்தப்படும் சாரல் திருவிழா ஏற்பாடுகளும் கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளதால் அதற்கான முன்னேற்பாடு பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
குற்றாலம் பஸ் நிலையம், குற்றாலம் பேரூராட்சி, தென்காசி காசி விஸ்வ நாதர் கோவில் மற்றும் தென்காசியில் பொது மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் குற்றால சாரல் திருவிழாவிற்கு அனைவரையும் வரவேற்கும் வகையில் வரவேற்பு பதாகைகள் அமைக்கப்பட்டு வருகிறது.
குற்றாலத்தில் இன்று காலையில் குளிர்ந்த காற்றுடன் விட்டுவிட்டு லேசான சாரல் மழை பெய்ததால் குற்றாலம், தென்காசி பகுதிகளில் குளிர்ச்சியான சூழ்நிலை நீடித்து வருகிறது.