தமிழ்நாடு செய்திகள்

சென்னையில் வைரஸ் மற்றும் டெங்கு காய்ச்சல் பரவுகிறது- டாக்டர்கள் எச்சரிக்கை

Published On 2025-09-19 13:07 IST   |   Update On 2025-09-19 13:07:00 IST
  • வைரஸ்கள் பரவலுக்கு தண்ணீர் மாசுபாடே காரணம்.
  • காய்ச்சலுக்கு பிந்தைய பாதிப்புகள் விரைவில் குணமாக தினமும் நன்றாக தூங்கி ஓய்வெடுக்க வேண்டும்.

சென்னை:

தமிழகம் முழுவதும் இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல் அதிக அளவில் பரவுகிறது. சளி, இருமல், தொண்டை வலி, தலைவலி, உடல்வலி என்று பல்வேறு உபாதைகளுடன் சிரமப்படுகிறார்கள்.

அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் காய்ச்சலுக்காக சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. மருந்து மாத்திரைகள் எடுத்து நான்கைந்து நாட் களில் காய்ச்சல் குணமானாலும் இருமல், உடல் சோர்வு இரண்டு, மூன்று வாரங்களுக்கு நீடிக்கிறது.

சென்னையில் வைரஸ் காய்ச்சலுடன் டெங்கு காய்ச்சல் பாதிப்பும் இருக்கிறது. வைரஸ்கள் பரவலுக்கு தண்ணீர் மாசுபாடே காரணம். எனவே பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று கவுன்சிலர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளார்கள்.

அம்பத்தூர் பகுதியை சேர்ந்த கவுன்சிலர் நாகவள்ளி கூறும்போது, ஒரே பள்ளியில் படிக்கும் காய்ச்சல் அறிகுறி இருந்த 13 மாணவர்களுக்கு ரத்த மாதிரிகள் எடுத்து சோதித்ததில் டெங்கு, மலேரியா அறிகுறிகள் இல்லை என்றார்.

டாக்டர்கள் கூறும்போது, இன்புளூயன்சா காய்ச்சல் பரவுவது வழக்கமானது தான். குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் இன்புளூயன்சா தடுப்பூசி போட்டுக்கொள்வது நல்லது என்றார்கள்.

மேலும் அவர்கள் கூறும் போது, முக கவசம் அணிவது, கூட்டங்களை தவிர்ப்பது நல்லது என்றார்கள். காய்ச்சலுக்கு பிந்தைய பாதிப்புகள் விரைவில் குணமாக தினமும் நன்றாக தூங்கி ஓய்வெடுக்க வேண்டும். புரத சத்து உணவுகளையும், கீரை, காய்கறிகள் ஆகியவற்றையும் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். முடிந்தவரை வெளியூர் பயணங்களை தவிர்க்க வேண்டும். குடிநீரை கொதிக்க வைத்து குடிக்க வேண்டும் என்றார்கள்.

வறட்டு இருமல், தலை வலி, உடல் சோர்வு போன்ற பாதிப்புகள் ஒரு வாரத்துக்கு மேல் நீடிப்பதாக காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டவர்கள் கூறுகிறார்கள்.

Tags:    

Similar News