முப்படையினர் கொடி நாளுக்கு தாராளமாக நிதி வழங்க வேண்டும்- கவர்னர் ஆர்.என். ரவி அறிக்கை
சென்னை:
தமிழக கவர்னர் ஆர்.என். ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் மாதம் 7-ந் தேதியன்று, முப்படையினர் கொடி நாளை நாம் கடைப்பிடிக்கிறோம். இந்த நாளன்று நமது முப்படையினரின் தளர்வில்லாத துணிச்சல், தியாகம், தேசபக்தி ஆகியவற்றுக்கு நாம் பாராட்டுக்களை செலுத்துகிறோம். இவர்கள் தாம் நமது தேசத்தின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையின் உறுதியான தூண்களாக இருக்கின்றார்கள்.
அவர்களை கவுரவப்படுத்துவதில் நமக்கிருக்கும் ஒட்டுமொத்த பொறுப்பையும் படைவீரர்கள் கொடிநாள் நினைவூட்டுகிறது.
முப்படையினர் கொடி நாள் நிதியளிப்பில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னணி வகித்து வருகிறது. மாநில அரசும் கூட, முன்னாள் படையினருக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் சலுகைகள், விலக்குகள், இட ஒதுக்கீடுகள் ஆகியவற்றை கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் அளித்து வருகிறது. நாம் முப்படையினர் கொடிநாளைக் கடைப்பிடிக்கும் வேளையிலே, நமது பாதுகாப்புப் படையினர், மூத்த முன்னாள் ராணுவத்தார் மற்றும் அவர்களின் குடும்பத்தாருக்கு ஆதரவாக இருப்பதில் நமது அர்ப்பணிப்பை நாம் மீள் உறுதி செய்வோம்.
தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடிமகனும், முப்படையினர் கொடிநாளுக்குத் தாராளமாக நிதியளிக்க முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நாம் படையினரின் பால் நமது நன்றியறிதலை சொற்களில் மட்டுமல்ல, செயல்களிலும் கூட நமது ஆழமான மரியாதையையும், பாராட்டுதல்களையும் பிரதிபலிக்கச் செய்வோம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.