தமிழ்நாடு செய்திகள்

2,553 மருத்துவ பணியிடங்களுக்கு ஜனவரியில் தேர்வு- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Published On 2024-11-17 12:41 IST   |   Update On 2024-11-17 12:41:00 IST
  • கூடிய விரைவில் மேலும் 10 மருத்துவமனைகள் திறந்து வைக்கப்பட உள்ளன.
  • மிகப்பெரிய நிறுவனங்கள் மூலம் ஆன்லைனில் இந்த தேர்வுகள் நடைபெறும்.

நெல்லை:

தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதிய கட்டிடங்களை இன்று திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்திலேயே முதல் முறையாக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாணவிகள், பெண் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பெண் பணியாளர்கள் பயன்படுத்தும் வகையில் 'பிங்க் சோன்' எனப்படும் 5 தனி ஓய்வறைகள் திறந்து வைக்கப்பட்டு உள்ளது.

நெல்லையில் சுமார் ரூ. 72 கோடி மதிப்பீட்டில் 450 படுக்கை வசதிகள், 10 ஆபரேஷன் தியேட்டர்கள் கட்டும் பணிகள் வருகிற மார்ச் மாதத்திற்குள் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

நெல்லை மாவட்டத்தில் நகர்ப்புற நல்வாழ்வு மையம் என்ற 22 புதிய மருத்துவமனைகள் அமைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில் மருத்துவர், செவிலியர், சுகாதார பணியாளர் மற்றும் உதவியாளர் என 4 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இதில் முதலமைச்சரால் 12 மருத்துவமனைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் மேலும் 10 மருத்துவமனைகள் திறந்து வைக்கப்பட உள்ளன.

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 1,353 மருத்துவ பணியிடங்கள் மற்றும் 2026-ம் ஆண்டு வரை தேவைப்படும் மருத்துவர்கள் பணியிடங்கள் என 2,553 காலி பணியிடங்களுக்கு 24 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன.

அதற்கான தேர்வுகள் வருகிற ஜனவரி 27-ந்தேதி நடைபெற உள்ளது. மிகப்பெரிய நிறுவனங்கள் மூலம் ஆன்லைனில் இந்த தேர்வுகள் நடைபெறும்.

மேலும் கிராமப்புற செவிலியர் பணியிடங்கள் 2,250 நிரப்பப்படும். இது சம்பந்தமாக 30 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News