தமிழ்நாடு செய்திகள்

சாலை ஓரத்தில் கிடந்த எலும்புக்கூடுகள்-எலுமிச்சம் பழம்: பொதுமக்கள் பீதி

Published On 2025-02-04 14:47 IST   |   Update On 2025-02-04 14:47:00 IST
  • சாலை ஓரத்தில் மனித எலும்புக்கூடுகள் மஞ்சள், குங்குமம், எலுமிச்சம்பழம் போன்றவை கிடந்ததை பார்த்து கடும் அதிர்ச்சியடைந்தனர்.
  • அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கடலூர்:

கடலூர் மஞ்சக்குப்பத்தில் நேதாஜி சாலை உள்ளது.

இங்கு சாலை ஓரத்தில் இன்று காலை துப்புரவு பணியாளர்கள் வழக்கம் போல் தூய்மை பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சாலை ஓரத்தில் மனித எலும்புக்கூடுகள் மஞ்சள், குங்குமம், எலுமிச்சம்பழம் போன்றவை கிடந்ததை பார்த்து கடும் அதிர்ச்சியடைந்தனர்.

அவ்வழியாக சென்ற பொதுமக்கள் இதனை பார்த்து ஏராளமானோர் திரண்டு பயத்துடன் பார்வையிட்டு வந்தனர். இத்தகவல் அறிந்த கடலூர் புதுநகர் சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் விசாரணை மேற்கொண்டதில் மனித எலும்பா? அல்லது செயற்கையாக உருவாக்கப்பட்ட எலும்பு? என்பதனை பார்வையிட்டு சோதனை செய்தனர்.

இதனை தொடர்ந்து அங்கு இருந்த அனைத்து பொருட்களை சாக்கு முட்டையில் கட்டிக்கொண்டு விசாரணை நடத்துவதற்காக போலீஸ் நிலையத்திற்கு போலீசார் கொண்டு சென்றனர். மேலும் சாலை ஓரத்தில் உள்ள வணிக வளாகம் பகுதியில் மந்திரிக்கப்பட்ட எலும்புகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இருந்ததால் யாருக்கேனும் சூனியம் வைக்கப்பட்டதா? என்ற பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டது.

Tags:    

Similar News