காவலாளி அஜித்குமார் இறந்ததற்கான உண்மையை மறைக்க முயற்சி செய்பவர்கள் மீது நடவடிக்கை கோரி ஐகோர்ட்டில் மனு
- அஜித்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்தபோது, அவரது உடலில் இருந்த காயங்களையும் மறைக்கும் முயற்சியில் மர்ம நபர்கள் ஈடுபட்டு இருக்கின்றனர்.
- அஜித்குமார் குடும்பத்தினரிடம் பணம் தருவதாக கட்டப்பஞ்சாயத்து செய்துள்ளனர்.
மதுரை:
மதுரையைச் சேர்ந்த மகாராஜன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் காளியம்மன் கோவிலில் தரிசனம் செய்ய வந்த நிகிதா என்ற பெண் மணி கோவில் காவலர் அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் அளித்து உள்ளார். அதன்பேரில் விசாரணைக்கு அஜித்கு மாரை அழைத்துச்சென்ற போலீசார், அவரை 2 நாள் சட்டவிரோத காவலில் அடைத்து வைத்து கொடூரமாக தாக்கியுள்ளனர்.
இதில் அவர் படுகாயம் அடைந்து பரிதாபமாக இறந்து விட்டார். இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்த வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைத்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மடப்புரம் கோவிலில் பதிவான கேமரா காட்சிகளை திருப்புவனம் போலீசாருடன் இணைந்து அப்பகுதியை சேர்ந்த சிலரும், ரகசியமாக எடுத்துச்சென்று விட்டனர். இதேபோல அஜித்குமார் உடலை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்தபோது, அவரது உடலில் இருந்த காயங்களையும் மறைக்கும் முயற்சியில் மர்ம நபர்கள் ஈடுபட்டு இருக்கின்றனர்.
அதுமட்டுமல்லாாமல் இந்த விஷயத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என்று அஜித்குமார் குடும்பத்தினரிடம் கேட்டுக்கொண்டு, அதற்காக பணம் தருவதாகவும் கட்டப்பஞ்சாயத்து செய்துள்ளனர். இதுபோன்ற மனித உரிமைக்கு எதிரான சட்டவிரோத காவல் மரணங்களை தடுக்க உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பிறப்பிக்க வேண்டும். அஜித்குமார் மரணத்தில் உள்ள உண்மைகளை மறைக்க முயற்சி செய்து வருபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், மரியா கிளாட் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், அஜித்குமார் மரணம் தொடர்பான அனைத்து வழக்குகளும் நாளை (8-ந்தேதி) விசாரணைக்கு வருகின்றன. அந்த வழக்குகளுடன் இந்த மனுவும் சேர்த்து விசாரிக்கப்படும் என தெரிவித்தனர்.