நித்யானந்தா ஆசிரமத்துக்கு வைத்த சீல் உடைப்பு- 7 சீடர்கள் கைது
- 2 இடங்களிலும் ஆசிரமம் கட்டப்பட்டு நித்யானந்தா சீடர்கள் மற்றும் பக்தர்கள் வழிபட்டு வந்தனர்.
- ஆசிரமத்தில் இருந்த பெண் சீடர்களை வெளியேற்றி ஆசிரமத்திற்கு சீல் வைத்தனர்.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் கோதைநாச்சியார்புரம், சேத்தூர் ஆகிய பகுதிகளில் தனியாருக்கு சொந்தமான 2 நிலங்கள் நித்யானந்தா தியான பீடத்திற்கு தானமாக வழங்கப்பட்டதாம். இந்த 2 இடங்களிலும் ஆசிரமம் கட்டப்பட்டு நித்யானந்தா சீடர்கள் மற்றும் பக்தர்கள் வழிபட்டு வந்தனர்.
இந்தநிலையில் நித்யானந்தா மீது எழுந்த சர்ச்சைகளை தொடர்ந்து, அந்த தான பத்திர பதிவை ரத்து செய்யக்கோரி தானமாக வழங்கிய நபர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த இடங்களை இரு தரப்பை சேர்ந்தவர்களும் பயன்படுத்தக்கூடாது என ஐகோர்ட்டு இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவுப்படி தாசில்தார் ராமசுப்பிரமணியன் தலைமையிலான அதிகாரிகள் ஆசிரமத்தில் இருந்த பெண் சீடர்களை வெளியேற்றி ஆசிரமத்திற்கு சீல் வைத்தனர்.
இந்த சீலை உடைத்து ஆசிரமத்திற்குள் சீடர்கள் சென்றனர். இதுகுறித்து வருவாய்த்துறையினர் அளித்த புகாரின் பேரில் சீடர்கள் உதயகுமார், தீபா, பிரேமா, தாமரைச்செல்வி, ரேவதி, நித்திய சாரானந்தசாமி, நித்திய சுத்த ஆத்மானந்தா சாமி ஆகிய 7 பேர் மீது ராஜபாளையம் தெற்கு மற்றும் சேத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்து இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.