தமிழ்நாடு செய்திகள்

அகஸ்தியர் அருவியில் தண்ணீர் சீராக விழும் காட்சி.

பாபநாசம் அகஸ்தியர் அருவியில் குளிக்க அனுமதி- மணிமுத்தாறு அருவியை பார்வையிடலாம்

Published On 2025-12-02 13:13 IST   |   Update On 2025-12-02 13:13:00 IST
  • இன்று முதல் பாபநாசம் அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • 2 அருவிகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகமாக இருந்ததால் சுற்றுலா பயணிகளுக்கு தடை நீட்டிக்கப்பட்டது.

நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் கடந்த மாதம் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமாக பெய்தது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையில் அதி கனமழை பெய்தது.

இதனால் பிரதான அணைகளான பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. அதேபோல் மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதிகளிலும் வரலாறு காணாத மழை அளவு பதிவானது.

இதனால் மணிமுத்தாறு அருவியில் காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கடந்த 23-ந்தேதி அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

அன்றைய தினமே பாபநாசம் வனச்சரகத்திற்கு உட்பட்ட அகஸ்தியர் அருவியில் தண்ணீர் வரத்து அதிகமாக இருந்ததால் அகஸ்தியர் அருவிக்கு சூழல் சுற்றுலாவின் பொருட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் தொடர்ந்து 2 அருவிகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகமாக இருந்ததால் சுற்றுலா பயணிகளுக்கு தடை நீட்டிக்கப்பட்டது.

இதனிடையே கடந்த 2 நாட்களாக மழை இல்லாமல் வெயில் அடிக்க தொடங்கி உள்ளதால், அருவிகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. இதனால் இன்று முதல் பாபநாசம் அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் 9 நாட்கள் தடைக்கு பின்னர் அருவியில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியலிட்டனர்.

அதேநேரம் அம்பாசமுத்திரம் வனச்சரகத்திற்கு உட்பட்ட மணிமுத்தாறு அருவி பகுதியில் வரும் தண்ணீர் வரத்து குளிப்பதற்கு ஏதுவாக இல்லாததால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. அதேநேரம் அருவியை பார்வையிட அனுமதி வழங்கி வனத்துறை உத்தரவிட்டுள்ளது. 

Tags:    

Similar News