மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது
- அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு 8,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
- நீர்வரத்தை விட மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு அதிகமாக உள்ளதால் நீர்மட்டம் வெகுவாக சரிந்து வருகிறது.
மேட்டூர்:
கர்நாடகம்-தமிழகம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அமைகிறது. கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் ஆகிய அணைகளில் நீர் நிரம்பும்போது தமிழகத்திற்கு உபரி நீர் திறந்து விடப்படுகிறது. தற்போது இந்த அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பு வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.
இதனால் மேட்டூர் அணைக்கு நேற்று நீர்வரத்து வினாடிக்கு 130 கன அடியாக இருந்தது. இன்று நீர்வரத்து மேலும் குறைந்து வினாடிக்கு 125 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. நீர்மட்டம் 100.40 அடியாகவும், நீர் இருப்பு 65.36 டி.எம்.சி.யாகவும் உள்ளது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு 8,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அதுபோல் கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 400 கன அடி வீதம் நீர் திறந்து விடப்பட்டுள்ளது. நீர்வரத்தை விட மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு அதிகமாக உள்ளதால் நீர்மட்டம் வெகுவாக சரிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.