மேட்டூர் அணை நீர்மட்டம் 114.11 அடியாக உயர்வு
- கடந்த சில நாட்களாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
- தற்போது அணையில் 84.38 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையின் தீவிரத்தை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்ததால் அணையின் நீர்மட்டம் 113 அடியாக குறைந்தது.
இதற்கிடையே கடந்த சில நாட்களாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. மேலும் நீர்வரத்தை விட குறைவான அளவிலேயே பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வந்ததால் அணையின் நீர்மட்டமும் உயர தொடங்கியது. அதன்படி இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.11 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 739 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீரும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 400 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 84.38 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.