இந்தாண்டில் 7-வது முறையாக நிரம்பும் மேட்டூர் அணை
- மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது.
- மேட்டூர் அணையில் தற்போது 93.24 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இந்தாண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியது. இதன் காரணமாக மழை தீவிரம் அடைந்ததால் கர்நாடகாவில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனால் அங்கிருந்து உபரிநீர் தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் திறக்கப்பட்டது.
நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டதால் மேட்டூர் அணை இந்தாண்டில் முதல் முறையாக கடந்த ஜூன் மாதம் 29-ந் தேதி நிரம்பியது. பின்னர் நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்தது. ஆனாலும் காவிரி டெல்டா பாசனத்துக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வந்ததால் அணையின் நீர்மட்டமும் குறைந்தது.
பின்னர் மழை மீண்டும் பெய்ய தொடங்கியதால் நீர்வரத்து அதிகரித்து மேட்டூர் அணை இந்தாண்டில் 2-வது முறையாக கடந்த ஜூலை மாதம் 5-ந் தேதியும், 3-வது முறையாக கடந்த ஜூலை மாதம் 20-ந் தேதியும், ஜூலை 25-ந் தேதி 4-வது முறையாகவும், ஆகஸ்ட் மாதம் 20-ந் தேதி 5-வது முறையாகவும், கடந்த 2-ந் தேதி 6-வது முறையாகவும் நிரம்பியது.
இதற்கிடையே மீண்டும் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் அணைக்கு நீர்வரத்தும் குறைந்து காணப்பட்டது. ஆனாலும் அணைக்கு வரும் நீரை விட அதிகளவில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் நீர்மட்டம் குறைய தொடங்கியது.
இந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 119.86 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 19 ஆயிரத்து 228 கனஅடியாக அதிகரித்து காணப்படுகிறது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 800 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டு வருகிறது. நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால் இந்தாண்டில் மேட்டூர் அணை 7-வது முறையாக நிரம்பும் தருவாயில் உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அணையில் தற்போது 93.24 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.