மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
- மழையை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது.
- தற்போது அணையில் 91.35 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
மேட்டூர்:
கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இந்தாண்டு தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்தது. இதன் காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பியதை அடுத்து உபரிநீர் தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக இந்தாண்டில் 5-முறை மேட்டூர் அணை நிரம்பியது.
மழையை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது. கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதால் மேட்டூர்அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைய தொடங்கியது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 118.66 அடியாக இருந்தது.
இதற்கிடையே கடந்த 2 நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால் நீர்வரத்தும் அதிகரித்து வருகிறது. நேற்று அணைக்கு வினாடிக்கு 9 ஆயிரத்து 828 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று 16 ஆயிரத்து 493 கனஅடியாக அதிகரித்து காணப்படுகிறது.
அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 850 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அணையில் 91.35 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.