மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டியது
- நெல்லை மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் பிரதான அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்தது.
- பாபநாசம் அகஸ்தியர் அருவியில் நீர்வரத்து சீரானதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
நெல்லை:
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக பெய்த பரவலான மழை காரணமாக மாவட்டம் முழுவதும் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவி வருகிறது. மேலும் அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் பிரதான அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்தது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 23 அடி உயர்ந்தது. நேற்று பகலில் இருந்து மழை படிப்படியாக குறைந்தது. இதனால் அணைகளுக்கு வரும் நீரின் வரத்தும் குறைந்தது.
பிரதான அணையான பாபநாசம் அணைக்கு நேற்று வினாடிக்கு 4 ஆயிரத்து 500 கனஅடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில், மழை குறைந்துவிட்டதால் அணைக்கு வரும் நீரின் அளவு 721 கனஅடியாக குறைந்து விட்டது. எனினும் நீர் வரத்தால் அந்த அணை நீர்மட்டம் இன்று மேலும் 1 ½ அடி உயர்ந்து 87 அடியை கடந்துள்ளது.
இதேபோல் மணிமுத்தாறு அணை பகுதியில் நேற்று காலை வினாடிக்கு 1,797 கனஅடி நீர் வந்த நிலையில், இன்று 545 கனஅடியாக குறைந்தது. அந்த அணை நீர்மட்டம் 90 அடியை எட்டியுள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 104 அடியாக உள்ளது. இன்று காலை நிலவரப்படி மாநகர், புறநகர், அணைபகுதிகள் என எங்கும் மழை பெய்யவில்லை. மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து எஸ்டேட் பகுதிகளில் லேசான சாரல் பெய்தது.
இந்த மழையால் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மணிமுத்தாறு அருவியில் 1 வாரத்திற்கும் மேலாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. பாபநாசம் அகஸ்தியர் அருவியில் நீர்வரத்து சீரானதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
கடந்த 4 நாட்களாக மழை பெய்ததால் அம்பை, கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், சேரன்மகாதேவி, களக்காடு உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் ஆயிரக்க ணக்கான ஏக்கரில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்கதிர்கள் வயலில் சாய்ந்து நாசமாகிவிட்டது.
தென்காசி மாவட்டத்திலும் சில நாட்களாக பெய்த தொடர் கனமழையால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நேற்று மலைப்பகுதியில் மழை குறைந்ததால் தண்ணீர் வரத்தும் குறைந்தது. தொடர்ந்து சுற்றுலாப்பயணிகள் மெயினருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
அணைகளை பொறுத்தவரை தொடர் கனமழையால் கடனா, ராமநதி அணைகள் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. நேற்று முதல் மழை குறைந்ததன் காரணமாக நீர்வரத்து சற்று குறைந்தது. நேற்று 61 அடியாக இருந்த கடனா அணை நீர்மட்டம் இன்று ஒரே நாளில் 4 அடி உயர்ந்து 65 அடியாக உள்ளது. ராமநதி அணை நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 52 அடியாக உள்ளது.