தமிழ்நாடு செய்திகள்
null

ஐடி ஊழியர் கவின் ஆணவக்கொலை: குற்றவாளி சுர்ஜித் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

Published On 2025-07-30 11:29 IST   |   Update On 2025-07-30 13:42:00 IST
  • சுர்ஜித்தின் பெற்றோர் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
  • சுர்ஜித்தின் பெற்றோரை கைது செய்ய வலியுறுத்தி கவினின் உறவினர்கள் போராட்டம்

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் தெற்கு மாடவீதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி தமிழ்செல்வி. இவர்களது மகன் கவின் செல்வ கணேஷ் (வயது 27). என்ஜினீயரான இவர் சென்னையில் ஐ.டி. நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

கடந்த 27-ந்தேதி கவின் பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் பகுதியில் உள்ள ஒரு சித்த மருத்துவமனைக்கு வந்தபோது அதே பகுதியில் வசிக்கும் சப்-இன்ஸ்பெக்டர் தம்பதிகளான சரவணன்-கிருஷ்ணகுமாரி ஆகியோரின் மகன் சுர்ஜித்(24) என்பவர் கவினை அரிவாளால் வெட்டிக்கொலை செய்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சுர்ஜித்தை கைது செய்தனர். இந்த கொலைக்கு தூண்டுதலாக சுர்ஜித்தின் பெற்றோர் செயல்பட்ட தாகவும், அவர்களையும் வழக்கில் சேர்த்து கைது செய்ய வேண்டும் என்றும் கவினின் உறவினர்கள் புகார் அளித்தனர்.

இதனைதொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் தம்பதி மீது வழக்குப்பதிவு செய்யப் பட்ட நிலையில் அவர்கள் மீது 'சஸ்பெண்டு' நட வடிக்கையும் பாய்ந்தது.

இந்நிலையில் அவர்களை கைது செய்யும் வரை கவினின் உடலை வாங்க மாட்டோம் என்று கூறி கவின் உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அரசு சார்பில் வழங்கப்பட்ட நிதியையும் அவர்கள் பெற்றுக்கொள்ளவில்லை.

நேற்று மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கவின் சகோதரர் பிரவீன் மற்றும் உறவினர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. தொடர்ந்து அவர்கள் இன்று 3-வது நாளாக தங்களது கிராமத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் கவினும், சுர்ஜித்தின் சகோதரியும் காதலித்ததாக கூறி அவர்கள் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை கவின் உறவினர்கள் வெளியிட்டனர். மேலும் அந்த பெண்ணின் செல்போனை வாங்கி ஆய்வுக்கு உட்படுத்தவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்டு, பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்ட சுர்ஜித்தை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் அடைக்க இன்று நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் இருக்கும் சுர்ஜித்தை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் திட்ட மிட்டுள்ளனர்.

கொலை சம்பவத்தில் வேறு யார்-யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது?, கவினுக்கும், சுர்ஜித்தின் சகோதரிக்கு மான பழக்கம் எப்படி இருந்தது என்பது போன்ற பல்வேறு கேள்விகளுக்கு விடை காண சுர்ஜித்தை போலீசார் காவலில் எடுக்க இன்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

Tags:    

Similar News