தமிழ்நாடு செய்திகள்

இறுதி கட்ட பணியில் கண்ணதாசன் நகர் பஸ் நிலையம்.

புதுப்பொலிவுடன் உருவாகும் கண்ணதாசன் நகர் பஸ் நிலையம்- பார்க்கிங் வசதி, கடைகளுடன் விரைவில் திறக்க ஏற்பாடு

Published On 2025-12-10 12:27 IST   |   Update On 2025-12-10 12:27:00 IST
  • 60 மோட்டார்சைக்கிள்கள், 3 கார்கள் நிறுத்துவதற்கு இட வசதியும் உள்ளது.
  • கண்ணதாசன் நகரில் பஸ்களை ரோட்டோரம் வரிசையாக நிறுத்தி விடுவதால் பொது மக்களுக்கு இடையூறாக உள்ளது.

சென்னை:

சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பஸ் நிலையங்கள் பயணிகளுக்கு பல்வேறு அடிப்படை வசதிகளுடன் புதிதாக கட்டப்பட்டு வருகிறது.

வெளிச்சம் இல்லாமல் இருள் சூழ்ந்து இருந்ததால் பயணிகள் இரவு நேரத்தில் பஸ் நிலையத்திற்குள் நுழையவே பயந்தனர். குடிநீர், கழிப்பிட வசதி இல்லாமல் இருந்தது. பஸ் நிலையத்தை பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. இரவு நேரங்கள் மட்டுமின்றி பகல் வேளையிலும் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடியது. பாதுகாப்பற்ற நிலையில் மாநகர பஸ் நிலையங்கள் இருந்ததால் அதனை சீர்ப்படுத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார்.

மிகவும் மோசமான நிலையில் இருந்த பஸ் நிலையங்கள் புதிதாக கட்டும் பணி பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் மேற்கொள்ளப்பட்டது. அமைச்சர் பி.கே.சேகர்பாபு வட சென்னை பகுதியில் உள்ள பஸ் நிலையங்களை புதிதாக கட்டுவதற்கான நிதியினை ஒதுக்கினார். தற்போது கண்ணதாசன் நகர், திரு.வி.க.நகர், முல்லை நகர் பஸ் நிலையங்கள் கட்டும் பணி இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. கண்ணதாசன் நகர் பஸ் நிலையம் ரூ.13.40 கோடி செலவில் கட்டும் பணி கடந்த ஆண்டு தொடங்கியது. தரை மற்றும் முதல் தளத்துடன் புதிய பஸ் நிலையம் கட்டும் பணி நடந்தது. 5,900 சதுர அடி தரை தளமும், 5,300 சதுர அடி முதல் தளமும் கட்டப்பட்டு உள்ளது.

மொத்த கட்டிட பரப்பளவு 11,200 சதுர அடியாகும். 16 பஸ்கள் நிற்கக் கூடிய வகையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. நடை மேடைகளில் 100 பேர் அமரக்கூடிய வகையில் இருக்கைகள் அமைகிறது.



60 மோட்டார்சைக்கிள்கள், 3 கார்கள் நிறுத்துவதற்கு இட வசதியும் உள்ளது. தரை மற்றும் முதல் தளத்தில் ஆண்-பெண் பொதுக்கழிப்பிட வசதி செய்யப்பட்டு உள்ளது. குடிநீர் வசதியும் செய்யப்படுகிறது.

பொதுமக்கள் காத்திருந்து பயணிக்கக் கூடிய வகையில் பஸ் நிலையத்தில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன. தரை தளத்தில் 4 கடைகளும் முதல் தளத்தில் 4 வணிகப் பகுதிக்கும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

நவீன மின் விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. பயணிகள் மட்டுமின்றி ஊழியர்கள் ஓய்வு எடுக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. அதிகாலையில் இருந்து இரவு வரை பயணிகள் பயம் இல்லாமல் பாதுகாப்பாக பயணம் செய்வதற்கான வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

பஸ் நிலைய கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் புதிய பஸ் நிலைய பணிகளை ஆய்வு செய்து விரைவில் திறப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்.

முதலமைச்சர் அல்லது துணை முதலமைச்சர் புதிய பஸ் நிலையங்களை திறக்க திட்டமிடப்பட்டு உள்ளது. முல்லைநகர், கண்ணதாசன் நகர் பஸ் நிலையங்கள் பயன்பாட்டிற்கு வந்தால் ரோட்டோரம் நிறுத்தப்படும் மாநகர பஸ்கள் பஸ் நிலையத்திற்குள் சென்று விடும்.

கண்ணதாசன் நகரில் பஸ்களை ரோட்டோரம் வரிசையாக நிறுத்தி விடுவதால் பொது மக்களுக்கு இடையூறாக உள்ளது. விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என்று பொது மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Similar News