சி.பா.ஆதித்தனார்-டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் புகழுக்கு மேலும் புகழ் சேர்த்தது அ.தி.மு.க.: கடம்பூர் ராஜூ
- பத்திரிகை உலகில் முடிசூடா மன்னர், பன்முக தன்மை கொண்டவர் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார்.
- தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனாருக்கு சென்னையில் எம்.ஜி.ஆர். காலகட்டத்தில் சிலை அமைக்கப்பட்டது.
நெல்லை:
பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 90-வது பிறந்தநாளையொட்டி திருச்செந்தூர் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ., தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
பத்திரிகை உலகில் முடிசூடா மன்னர், பன்முக தன்மை கொண்டவர், அனைத்து தரப்பு மக்களாலும் நேசிக்கப்பட்டு அவர்களால் அன்போடு சின்னையா என்று அழைக்கப்படும் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக இந்த மணிமண்டபம் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது.
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த ஆய்வு கூட்டம் மற்றும் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தபோது தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன் கோரிக்கையை ஏற்று மணிமண்டபம் கட்டுவதற்கு உடனடியாக அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இதையடுத்து அப்போது செய்தித்துறை அமைச்சராக இருந்த நான், முதலமைச்சர் உத்தரவின் அடிப்படையில் மணிமண்டபம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுத்தேன்.
டாக்டர் சிவந்தி ஆதித்தனார் புகழுக்கு காலத்திற்கும் பெருமை சேர்க்கும் விதமாக இந்த மணிமண்டபம் அ.தி.மு.க. அரசால் கட்டப்பட்டது. தொடர்ந்து இதனை பொதுமக்களும் கலந்து கொள்ளும் விதமாக மிகப்பெரிய விழாவாக நடத்தி எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
பல்வேறு மன்னர்கள், விடுதலைப் போராட்ட வீரர்கள் ஆகியோருக்கு சிலைகள் அமைக்கப்பட்ட நிலையில், பத்திரிகை உலகை சேர்ந்தவருக்கு சிலை அமைத்த முதல் பெருமை அ.தி.மு.க.வுக்கு தான் இருக்கிறது. இதே போல் தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனாருக்கு சென்னையில் எம்.ஜி.ஆர். காலகட்டத்தில் சிலை அமைக்கப்பட்டது. அவரது பிறந்தநாள் விழாவையும் அரசு விழாவாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான் அறிவித்தார்.
சி.பா. ஆதித்தனார் மற்றும் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆகியோரது புகழுக்கு மேலும் புகழ் சேர்த்த ஆட்சி அ.தி.மு.க. ஆட்சிதான் என்ற பெருமை எங்களுக்கு எப்போதும் உண்டு.
இவ்வாறு அவர் கூறினார்.