கன்னியாகுமரியில் மீனவர்கள் 'திடீர்' வேலைநிறுத்தம்
- நாட்டுப்படகு, வள்ளம் போன்றவை கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
- மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாததால் கன்னியாகுமரி கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி பெரியநாயகி தெருவில் மீனவர்கள் பாதுகாப்புடன் மீன்பிடி தொழில் செய்வதற்காக தூண்டில் வளைவு பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பாலம் குறுகலாக அமைக்கப்பட்டு உள்ளதால் மீனவர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள் என்று புகார்கள் எழுந்து உள்ளன. எனவே பாலத்தை மேலும் நீட்டித்து தர வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதனை வலியுறுத்தி கன்னியாகுமரியை சேர்ந்த விசைப்படகு, நாட்டுப்படகு மற்றும் வள்ளம் மீனவர்கள் சுமார் 5ஆயிரம் பேர் இன்று "திடீர்" என்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லாததால் விசைப்படகுகள் அனைத்தும் சின்ன முட்டம் துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. அதேபோல நாட்டுப்படகு, வள்ளம் போன்றவை கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாததால் கன்னியாகுமரி கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது. மீன் வரத்தும் அடியோடு நின்று விட்டது. இதனால் கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் அமைந்துள்ள மீன் சந்தைகள் களையிழந்து கிடக்கின்றன. மீன் வரத்து குறைந்ததால் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் மீன்விலையும் "கிடுகிடு" என்று உயர்ந்து உள்ளது.