கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரிசையில் காத்திருந்த பக்தர்கள்.
ஆனி அமாவாசை: ராமேசுவரத்தில் திரளான பக்தர்கள் புனித நீராடி சுவாமி தரிசனம்
- அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி தர்ப்பணம் கொடுத்தால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
- பக்தர்கள் வருகையை முன்னிட்டு கோவில், கடற்கரையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் உள்ள ராமநாத சுவாமி கோவில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றாக திகழ்கிறது. இங்குள்ள அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி தர்ப்பணம் கொடுத்தால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இதற்காக நாடு முழுவதும் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமேசுவரம் வருகை தருகிறார்கள். அமாவாசை நாட்களில் தர்ப்பணம் செய்வது சிறப்பாக கருதப்படுகிறது. அதன்படி ஆனி அமாவாசையை முன்னிட்டு நேற்று முதலே ஏராளமானோர் வாகனங்களில் ராமேசுவரம் வந்தனர். இன்று அதிகாலை அவர்கள் அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு பிண்டம் வைத்து தர்ப்பணம் கொடுத்தனர். வட மாநிலத்தில் இருந்து வந்திருந்த பக்தர்கள் கடற்கரை மணலில் சிவலிங்கம் செய்து பின் அதற்கு பூஜை செய்து அக்னி தீர்த்த கடலில் புனித நீராடினர்.
பின்னர் ராமநாதசுவாமி கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் புனித நீராடிய பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ராமநாதசுவாமி-பர்வத வர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனர். பக்தர்கள் வருகையை முன்னிட்டு கோவில், கடற்கரையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ராமேசுவரத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு கூடுதலாக சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.