தமிழ்நாடு செய்திகள்

சிறைத்துறை அதிகாரிகள் மீது முறைகேடு புகார்- தமிழக சிறைத்துறை தலைவர், மின்வாரியம் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு

Published On 2025-11-12 13:51 IST   |   Update On 2025-11-12 13:51:00 IST
  • மின்சார திருட்டு முறைகேட்டை தடுக்க மின்வாரிய மற்றும் உயர் அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
  • சிறைத்துறை மற்றும் மின்வாரிய துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்கப்பட்டது.

மதுரை:

தூத்துக்குடியைச் சேர்ந்த சேகர் என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் உள்ள மத்திய சிறைச்சாலைகளில் சிறையை கண்காணிக்க தமிழ்நாடு சிறைத்துறை தலைவர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். மாவட்ட, மத்திய சிறைச்சாலை கண்காணிப்பாளர்கள் மூலம் சிறைகள் நிர்வாகம் செய்யப்பட்டு வருகின்றன.

சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு மத்திய சிறைச்சாலையை ஒட்டியுள்ள பகுதிகளில் குடியிருப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதிகாரிகள் குடியிருப்பில் உள்ள மின் இணைப்பில் முறைகேடு செய்து வருகின்றனர்.

மதுரை மத்திய சிறை, கோவை மத்திய சிறையில் உள்ள அதிகாரிகள் இது போன்று மின் திருட்டில் ஈடுபட்டு உள்ளனர். சிறைச் சாலைகளில் உள்ள பல அதிகாரிகள் வீட்டில் மின் இணைப்பு இல்லை. இருந்த போதும் அதிகளவில் மின்சாதனங்களை வைத்து பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் மின்கட்டணம் இல்லை.

குறிப்பாக மதுரை சரக கூடுதல் இயக்குனர் டி.ஐ.ஜி. பழனி, கோயம்புத்தூர் சரகம் டி.ஐ.ஜி. சண்முக சுந்தரம், மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளராக பணியாற்றிய ஊர்மிளா ஆகியோர் இந்த முறைகேட்டில் சம்பந்தப்பட்டு உள்ளனர்.

எனவே மத்திய சிறையில் நடைபெறும் மின்சார திருட்டு முறைகேட்டை தடுக்க மின்வாரிய மற்றும் உயர் அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இது குறித்து உரிய விசாரணை நடத்தி முறைகேட்டில் ஈடுபட்ட உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சிறைத்துறை மற்றும் மின்வாரிய துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள் கடந்த 2023-ம் ஆண்டு முதல் இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

தொடர்ந்து எதிர்மனுதாரர் தரப்பில் பதில் அளிக்காமல் கால அவகாசம் கேட்பது ஏற்கத்தக்கது அல்ல. மனுதாரரின் குற்றச்சாட்டு தீவிரமானது. எனவே இந்த வழக்கை டிசம்பர் 3-ந் தேதி மீண்டும் விசாரணைக்கு பட்டியலிட வேண்டும். அதற்கு முன்னதாக சிறைத்துறை மற்றும் மின்வாரிய துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் அபராதம் விதிக்க நேரிடும் என உத்தரவிட்டு நீதிபதிகள் வழக்கு விசாரணையை டிசம்பர் 3-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Tags:    

Similar News