தமிழ்நாடு செய்திகள்

'சென்னை ஒன்' செயலி மூலம் பயணம் செய்யும் வசதி- முதலமைச்சர் நாளை தொடங்கி வைக்கிறார்

Published On 2025-09-21 12:03 IST   |   Update On 2025-09-21 12:03:00 IST
  • இந்த செயலி பஸ், புறநகர் ரெயில், மெட்ரோ ரெயில் மற்றும் கேப், ஆட்டோக்களை ஒரே கியூஆர் கோடு பயணச்சீட்டு மூலம் ஒருங்கிணைக்கிறது.
  • 'சென்னை ஒன் செயலி' பொது போக்குவரத்து சேவையில் ஒரு முக்கியமான முன்னெடுப்பாகும்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து அதிகார அமைப்பின் 2-வது ஆணையக் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் சென்னைப் பெருநகரப் பகுதிக்கான 25 ஆண்டுகளுக்கான போக்குவரத்து திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதுடன் சென்னை பெருநகருக்கான ஒருங்கிணைந்த கியூஆர் கோடு பயணச்சீட்டு மற்றும் பயணத் திட்டமிடல் செயலியை நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

சென்னைப் பெருநகரப் பகுதிக்கான (5.904 சதுர கி.மீ.) விரிவான போக்குவரத்து திட்டம் 2023-2048. 'மக்களும் பொருட்களும் தங்கு தடையின்றி ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்வதை உறுதி செய்யும் வகையில் ஒருங்கிணைந்த, நிலையான, பாதுகாப்பான மற்றும் நெகிழ்வான போக்குவரத்து சுற்றுச்சூழல் அமைப்பை ஏற்படுத்துதல்' என்ற தொலைநோக்குப் பார்வையுடன், நகர்ப்புற போக்குவரத்து முயற்சிகளை முன்னெடுத்து செல்லும் வகையில் இந்த புதிய செயலி அமைகிறது.

இதன் மூலம் விரிவான போக்குவரத்து திட்டம் மூலம் பயண நேரத்தை மற்றும் பயண செலவைக் குறைத்தல், நம்பகமான, விரைவான பொதுப் போக்குவரத்தை வழங்குதல், பல்வகை பொதுபோக்குவரத்தை ஒருங்கிணைத்து வலுப்படுத்துதல், குறைந்த போக்குவரத்து உமிழ்வு மற்றும் பயணத்தேவை மேலாண்மையை ஊக்குவித்தல் போன்றவை கண்காணிக்கப்பட்டு செயல்படுத்தப்பட உள்ளது.

இந்தியாவிலேயே முதன் முறையாக அனைத்து பொது போக்குவரத்தையும் இணைக்கும் வகையில் ஐ.ஓ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்டு தளங்களில் செயல்படக்கூடிய 'சென்னை ஒன் மொபைல் செயலியை' முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.

இந்த செயலி பஸ், புறநகர் ரெயில், மெட்ரோ ரெயில் மற்றும் கேப், ஆட்டோக்களை ஒரே கியூஆர் கோடு பயணச்சீட்டு மூலம் ஒருங்கிணைக்கிறது.

இதன் மூலம் பொதுமக்கள் பஸ்கள், மெட்ரோ மற்றும் புறநகர் ரெயில்களின் நிகழ்நேர இயக்கத்தை அறிந்து கொள்ளவும். யூபிஐ அல்லது கட்டண அட்டைகள் வழியாக பயணச் சீட்டுகளை பெற்றிடவும். ஒரே பயணப் பதிவின் மூலம் அனைத்து போக்குவரத்து முறைகளிலும் பயணம் செய்யவும் முடியும்.

இச்செயலி ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் மக்கள் பயன்படுத்திடும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது.

'சென்னை ஒன் செயலி' பொது போக்குவரத்து சேவையில் ஒரு முக்கியமான முன்னெடுப்பாகும். இனி பொதுமக்கள் பயணச் சீட்டு பெற வரிசையில் காத்திருக்க தேவையில்லை. இந்த செயலி மூலம் எளிதாக கட்டணம் செலுத்தி பயணச்சீட்டை பெற்று பயணம் செய்யலாம்.

Tags:    

Similar News