தமிழ்நாடு செய்திகள்

திருச்செந்தூர் கோவிலில் நிறைவு பெற்ற 2-ம் கட்ட மெகா திட்ட வளாக பணிகள்- முதலமைச்சர் திறந்து வைத்தார்

Published On 2025-02-17 12:53 IST   |   Update On 2025-02-17 12:53:00 IST
  • நிர்வாக அலுவலக கட்டிடம், கலையரங்கம், பொது தரிசன வரிசை வளாகம் ஆகியவற்றின் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
  • முதலமைச்சர் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

சென்னை:

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மெகா திட்ட வளாக பணிகள் நடை பெற்று வருகிறது.

இதில் தனியார் பங்களிப்பான எச்.சி.எல். நிறுவனம் சார்பில் ரூ.200 கோடி மதிப்பிலும், தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.100 கோடி மதிப்பிலும் என மொத்தம் ரூ.300 கோடி மதிப்பிலான மெகா திட்ட வளாக பணிகள் நடைபெற்று வருகிறது.

முதல் கட்ட பணிகளான யாத்திரிகர் நிவாஸ் பயணிகள் தங்கும் விடுதி பணிகள் முடிவுற்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

தொடர்ந்து 2-ம் கட்ட பணி நிறைவு பெற்று ரூ.20½ கோடி மதிப்பீட்டில் பணிகள் நிறைவு பெற்ற நிர்வாக அலுவலக கட்டிடம், கலையரங்கம், பொது தரிசன வரிசை வளாகம் ஆகியவற்றின் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

இதனை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

திருச்செந்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட கலெக்டர் இளம் பகவத், கோவில் இணை ஆணையர் ஞானசேகரன், மண்டல இணை ஆணையர் அன்புமணி, திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் சுகுமாரன், தாசில்தார் பாலசுந்தரம், தி.மு.க. மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் உமரிசங்கர், திருச்செந்தூர் நகராட்சி துணை சேர்மன் செங்குழி ரமேஷ், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ராம ஜெயம், பில்லா ஜெகன், தி.மு.க. நகர செயலாளர் வாள் சுடலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News