தற்காலிகமாக மூடப்படும் பிராட்வே பேருந்து நிலையம்... ராயபுரம், தீவுத்திடலில் இருந்து இயக்கப்படும் பஸ்கள்
- டி.என்.பி.எஸ்.சி. சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகளை இறக்கிவிட்டு தீவுத்திடல் தற்காலிக பஸ் முனையத்துக்கு செல்லும்.
- என்.எஸ்.சி. போஸ் சாலையில் உள்ள சிக்னல் அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றி ஈவ்னிங் பஜார் வழியாக அதன் அடிப்படை வழித்தடத்தில் இயக்கப்படும்.
சென்னை:
சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பிராட்வே பஸ் முனையம் மறுசீரமைப்பு மற்றும் உள்கட்டமைப்பு பணிகள் நடைபெற இருப்பதால் வருகிற 7-ந் தேதி முதல் பிராட்வே பஸ் நிலையத்திலிருந்து இயக்கப்பட்ட பஸ்கள், ராயபுரம் மற்றும் தீவுத்திடலில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருக்கும் பஸ் முனையத்திலிருந்து இயக்கப்படும்.
ராயபுரம் பஸ் முனையத்தில் இருந்து அண்ணாசாலை, ஈ.வெ.ரா. சாலை மற்றும் காமராஜர் சாலை வழியாக இயக்கப்படும் பஸ்கள் தத்தம் புறப்படும் இடத்திலிருந்து ராயபுரம் நோக்கி செல்லும் போது நார்த் போர்ட் சாலையில் துறைமுகம் எம்.எல்.ஏ. அலுவலகம் அருகில் அமைந்துள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று பயணிகளை இறக்கி, ஏற்றி ராயபுரம் தற்காலிக பஸ் முனையம் செல்லும்.
அதேபோன்று, ராயபுரம் தற்காலிக பஸ் முனையத்தில் இருந்து ஈ.வெ.ரா. சாலை மற்றும் அண்ணாசலை வழியாக இயக்கப்படும் பஸ்கள் நார்த் போர்ட் சாலையிலுள்ள துறைமுகம் எம்.எல்.ஏ. அலுவலகத்துக்கு எதிர்புறத்திலுள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று பயணிகளை இறக்கி, ஏற்றி அதன் அடிப்படை வழித்தடத்தில் இயக்கப்படும்.
காமராஜர் சாலை வழியாக இயக்கப்படும் பஸ்கள் நார்த் போர்ட் சாலை வலதுபுறம் திரும்பி எஸ்பிளனேடு சாலையில் ராஜா அண்ணாமலை மன்றம் அருகில் அமைந்துள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று பயணிகளை இறக்கி, ஏற்றி அதன் அடிப்படை வழித்தடத்தில் இயக்கப்படும்.
தீவுத்திடல் பஸ் முனையத்திலிருந்து கடற்கரை ரெயில் நிலையம் வழியாக இயக்கப்படும் பஸ்கள் தத்தம் புறப்படும் இடத்தில் இருந்து தீவுத்திடல் நோக்கி செல்லும் போது நார்த் போர்ட் சாலையிலுள்ள துறைமுகம் எம்.எல்.ஏ. அலுவலகத்துக்கு எதிர்புறத்திலுள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று பயணிகளை இறக்கிவிட்டு தீவுத்திடல் தற்காலிக பஸ் முனையத்துக்கு செல்லும்.
மண்ணடி சாலை வழியாக இயக்கப்படும் பஸ்கள் தத்தம் புறப்படும் இடத்தில் இருந்து தீவுத்திடல் நோக்கி செல்லும் போது எஸ்பிளனேடு சாலையின் வலதுபுறம் சென்று முத்துசாமி சாலையில் போர்ட் ஸ்டேசன் அமைந்துள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று பயணிகளை இறக்கிவிட்டு தீவுத்திடல் தற்காலிக பஸ் முனையத்துக்கு செல்லும்.
ஈ.வெ.ரா. சாலை மற்றும் வேப்பேரி வழியாக இயக்கப்படும் பஸ்கள் தத்தம் புறப்படும் இடத்தில் இருந்து தீவுத்திடல் நோக்கி செல்லும் போது, ராஜா அண்ணாமலை மன்றம் முன்பு இடது புறம் திரும்பி டி.என்.பி.எஸ்.சி. சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகளை இறக்கிவிட்டு தீவுத்திடல் தற்காலிக பஸ் முனையத்துக்கு செல்லும்.
தீவுத்திடல் தற்காலிக பஸ் முனையத்தில் இருந்து கடற்கரை ரெயில் நிலையம் வழியாக இயக்கப்படும் பஸ்கள் நார்த் போர்ட் சாலையில் உள்ள துறைமுகம் எம்.எல்.ஏ. அலுவலகத்துக்கு அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்லும்.
அதே போல் ஈ.வெ.ரா. சாலை மற்றும் வேப்பேரி வழியாக இயக்கப்படும் பஸ்கள், ராஜா அண்ணாமலை மன்றம் முன்பு பயணிகளை ஏற்றி எஸ்பிளனேடு சாலை வழியாக என்.எஸ்.சி. போஸ் சாலையில் உள்ள சிக்னல் அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றி ஈவ்னிங் பஜார் வழியாக அதன் அடிப்படை வழித்தடத்தில் இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.